இந்தியாவுக்கு 40% சான்ஸ்… ஆனால் ஆஸ்திரேலியாவுக்குதான் கப்பு – காரணம் என்ன?

IND vs AUS Final 2023: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையில் கோலாகலமான நிறைவு விழாவுடன் தொடங்குகிறது.  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்த பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் எதிர்பார்ப்பாக உள்ளது.

இறுதிக்கட்டத்தில் திருவிழா

கடந்த அக். 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய இந்த தொடர், அதே மைதானத்தில் வரும் நவ. 10ஆம்  தேதி நிறைவு பெறுகிறது. மொத்தம் 10 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள்தான் அரையிறுதி வரை முன்னேறின. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்கதேசம் ஆகியவை 5,6,7,8 ஆகிய இடங்களில் நிறைவு செய்தன. 

இந்த அணிகள் அனைத்தும் சாம்பியன் டிராபி தொடருக்கு தகுதிபெற்ற நிலையில், இலங்கை, நெதர்லாந்து அணிகள் முறையே 9,10ஆவது இடத்தில் நிறைவு செய்தது மட்டுமின்றி சாம்பியன் டிராபி வாய்ப்பையும் பறிகொடுத்தது. இந்த அணிகள் தகுதிச்சுற்று போட்டிகள் மூலம் நடப்பு உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

உச்சாணிக்கொம்பில் இந்தியா

சுமார் 45 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளன நிலையில், சாம்பியனாகப் போவது யார் என்பது இப்போது எல்லாரிடத்தும் உள்ளது. இந்தியா இந்த தொடரில் விளையாடிய 10 போட்டிகளிலும் வென்று உச்சாணிக்கோம்பில் உள்ளது. ஆஸ்திரேலியாவும் எந்த விதத்திலும் இந்தியாவுக்கு சளைத்தது இல்லை என்பதுபோல், முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் நேற்றைய அரையிறுதி ஆட்டம் உள்பட தொடர்ந்து 8 போட்டிகளில் வென்று மிரட்டி உள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் முதலிரண்டு போட்டிகளில் மட்டுமே ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. 

60-40 வாய்ப்பு

பலரும் இந்த இறுதிப்போட்டியை ஒட்டி தங்களின் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இரு அணிகளுக்கும் 50-50 வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும், ஒரு சிலர் ஆஸ்திரேலியாவுக்கே அதிக வாயப்பு இருப்பதாகவும், 60-40 என்ற ரேஷியோவில்தான் வெற்றியை வாய்ப்பை குறிப்பிட முடியும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியா 10 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றாலும் ஏன் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு என கூற வேண்டும் என்பதற்கு அவர்கள் காரணத்தையும் கூறுகின்றனர். 

அதாவது, இந்திய அணியின் இத்தனை வெற்றிகளுக்கும் முக்கியமாக இருப்பது ரோஹித் சர்மாவின் மிரட்டலான தொடக்கம்தான். அவர் தனது விக்கெட்டை எதிரணி முன் பரிசாக வைத்து தில்லுக்கு துட்டு என்ற ரீதியில் அதிரடியால் விளையாடி ரன்களை குவிப்பதால் மட்டுமே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்களால் பிந்தைய ஓவர்களில் பெரிய ஸ்கோரை எட்ட முடிகிறது என்ற வாதம் உள்ளது. ஆனால், ரோஹித் சர்மா தடுமாறிய ஒரு அணி என்றால் அது ஆஸ்திரேலியாதான்.

இந்தியாவை மிரட்டும் இந்த ஜோடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா முதலில் பந்துவீசி ஆஸ்திரேலியாவை 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக்கி உள்ளது. குறைந்த ஸ்கோர் என்றாலும், சேஸிங்கில் ரோஹித், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் என மூவரும் டக்அவுட்டாகி வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்விங் கண்டீஷனில் ரோஹித், கில், ஷ்ரேயாஸ் போன்றவர்கள் திணறுவது வழக்கம்தான். 
ஒருவேளை இறுதிப்போட்டியில் இந்தியா சேஸிங் செய்தால், பொழுதுசாயும் நேரம் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் – ஹேசில்வுட் ஆகியோருக்கு சாதகமாக இருக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் ஸ்டார்க் – ஹேசில்வுட் ஜோடி முதல் 10 ஓவர்களில் 18 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை பெற்றது. 

எனவே, இந்திய டாப் ஆர்டர் சரிந்தால் மிடில் ஆர்டர் மேல் கூடுதல் அழுத்தம் ஏற்படும். மேலும், இறுதிப்போட்டி என்பதால் ஆஸ்திரேலியா வழக்கத்தை விட ஆதிக்கம் செலுத்தும். இவையெல்லாம் எல்லாம்தான் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.