IND vs AUS: உலகக் கோப்பை இறுதிப்போட்டியை இந்த சேனிலும் நீங்கள் காணலாம்!

IND vs AUS Final 2023, Live Telecast: நடப்பு உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) அதன் கிளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இந்த போட்டியை உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது எனலாம். இந்தியா தனது 3ஆவது கோப்பையையும், ஆஸ்திரேலியா தனது 6ஆவது கோப்பையையும் கைப்பற்ற முட்டிமோதி வருகின்றன.

இந்திய அணி (Team India) இந்த தொடரில் எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியோ முதலிரு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், அடுத்து தொடர்ந்து 8 போட்டிகளை வென்று தற்போது இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்க வந்துள்ளது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 8ஆவது முறையாகவும், இந்தியா 4ஆவது முறையாக நுழைந்துள்ளன. 

வீயூஸ் பிச்சிக்கும்…

நாளைய போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பிட்ச் ரிப்போர்ட், டாஸ் நிகழ்வில் தொடங்கி முதல் பந்தில் இருந்து போட்டியை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். முந்தைய காலத்தில் பலரும் பக்கத்து வீட்டு தொலைக்காட்சி, வானொலி, டீக்கடை, சலூன், ஹோட்டல் டீவிகளிலேயே போட்டியை கண்டு வந்தாலும் தற்போது மொபைலில் போட்டியை பார்ப்பது எளிதாகியும்விட்டது, இலவசமுமாகிவிட்டது.

இந்தியா போட்டி என்றாலே அதிக பார்வையாளர்கள் இருப்பார்கள். கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியை நேரலையில் ஒரு கட்டத்தில் 5.4 கோடி பார்த்தார்கள் என்கிறபட்சத்தில் நாளைய இறுதிப்போட்டியின் வீயூயர்ஷிப் கணக்கு விண்ணை முட்டி புதிய சாதனையை படைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த தொடரின் இறுதிப்போட்டியை எதில், எப்போது காணலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

இறுதிப்போட்டி நிரல்கள்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த இறுதிப்போட்டி (ICC World Cup Final 2023) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகின்றன. போட்டி தொடங்குவதற்கு முன் மதியம் 1.35 மணி முதல் 1.50 மணிவரை இந்திய விமானப்படையின் சூர்யகிரண் குழுவினர் கண்கவர் விமான சாகசத்தை நிகழ்த்துகின்றனர். மேலும் முதல் இன்னிங்ஸ் குடிநீர் இடைவேளையின் போது பாடகர் ஆதித்யா கட்வியின் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் முடிந்த பின் பிரிதம் சக்ரபூத்தி, ஜோனிட்டா காந்தி, நாகாஷ் அஸிஸ், அமித் மிஷ்ரா, ஆகாஷா சிங், தூஷார் ஜோஷி ஆகியோரின் நிகழ்வுகளும், இரண்டாம் இன்னிங்ஸ் குடிநீர் இடைவேளையில் லேசர் மற்றும் லைட் ஷோக்கள் நடைபெற உள்ளன.

இந்த போட்டியை லீக் சுற்று போட்டிகளை போன்று தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி HD, கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல சேனல்களில் நீங்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். மேலும், மொபைலில் நீங்கள் இலவசமாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்திலும் காணலாம். மேலும், இறுதிப்போட்டியை நீங்கள் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலிலும் நேரலையில் காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.