குதூகலத்தில் இணைந்த கூகுள்… உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பக்கா டூடுல் – என்ன ஸ்பெஷல்?

Google Doodle IND vs AUS Final: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று மிக முக்கிய நாளாகும். இன்று எங்கு திரும்பினாலும் உலகக் கோப்பை (ICC World Cup 2023) இறுதிப்போட்டி குறித்த பேச்சுகள்தான் இருக்கும். உலகக் கோப்பையை வெல்லப்போவது சொந்த மண்ணில் சூறாவளியை கிளப்பும் இந்தியாவா, உலகக் கோப்பையின் ஆஸ்திரேலியாவா என்ற கணிப்புகள்தான் எல்லா திசைகளிலும்… 

அந்த வகையில், மக்களின் மனநிலை அறிந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் ரசிகர்களின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் வகையில் ஒரு சிறப்பு டூடுலை இன்று அதன் தளத்தில் வழங்கி உள்ளது. அதாவது, இன்றைய கூகுள் டூடுல் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு (IND vs AUS Final 2023) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது எனலாம். உலகக் கோப்பை தொடக்க நாள் அன்றும் கூகுள் ஒரு டூடுலுடன் ஆரம்பித்த நிலையில், இறுதிப்போட்டியை முன்னிட்டும் கூகுள் அதன் அசத்தலான டூடுலை வெளியிட்டுள்ளது. இன்றைய டூடுலில் உள்ள சிறப்பு என்ன என்பதை இதில் காணலாம். 

இறுதிப்போட்டி டூடுல்

இன்று கூகுள் தளத்தில் எதையாவது தேட நீங்கள் தேடல்பொறிக்கு சென்றவுடன், இந்தியா vs ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்த டூடுலைக் காணலாம். இந்த அனிமேஷன் டூடுலில், கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பிய கிரிக்கெட் மைதானத்தை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், கூகிளின் ‘O’ எழுத்து  உலகக் கோப்பையாகக் காட்டப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதன் ‘L’ எழுத்து கிரிக்கெட் பேட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டூடுலை நீங்கள் கிளிக் செய்தால், World Cup Final குறித்த தேடல் முடிவுகள் பக்கத்தை அடைவீர்கள். இங்கே தேடல் பட்டிக்கு அடுத்ததாக ஒரு கிரிக்கெட் பேட் மற்றும் பந்தைக் காண்பீர்கள். தேடல் முடிவுகள் பக்கத்தின் கீழே, இன்றைய இறுதிப் போட்டி மற்றும் உலகக் கோப்பை தொடர்பான தகவல்களைக் காணலாம். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இன்றைய ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 

பட்டையை கிளப்பிய தொடர்

இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றன. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை. வெறும் மூன்று போட்டிகளை மட்டுமே வென்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

இதில், நியூசிலாந்து வீழ்த்தி இந்திய அணியும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த உலகக் கோப்பையின் மிக மிக முக்கிய விஷயம் என்றால் அது ஆப்கானிஸ்தான் அணி பெற்ற நான்கு வெற்றிகளை குறிப்பிடலாம். அதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என மூன்று முன்னாள் சாம்பியன்களை அந்த அணி வீழ்த்தியது.  

ஒவ்வொரு சிறப்பான சந்தர்ப்பத்திலும் கூகுள் தனது ஆக்கப்பூர்வமான டூடுலை வழங்குகிறது. 2023 ஐசிசி உலகக் கோப்பையின் தொடக்கத்திற்கான டூடுலையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. அதே நேரத்தில், இப்போது இறுதிப் போட்டியிலும், கூகுள் அத்தகைய வேடிக்கையான டூடுலை வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.