தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அளவுகோல்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது

தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அளவுகோல்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது – தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

• பாதாள உலகத்தை முடக்குவதற்கு திறமையான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தேவை – பொலிஸார் குழுவில் தெரிவிப்பு

ஒரு சில நபர்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்புக் காவலர்களின் சேவைகளைப் பெறுவது குறித்துத் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர தலைமையில் 2023.11.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

தனியார் பாதுகாப்புக் காவலர்களின் துணையுடன் செல்லும் சிலரால் பொதுமக்கள் சில அசௌகரியமான நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எவரேனுமொருவர் பெற்றுக்கொள்ளும் தனிப்பட்ட பாதுகாப்புத் தொடர்பில் சட்டரீதியாக பொலிஸாருக்குத் தலையிட முடியாது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். எவ்வாறாயினும், அந்தத் தனியார் பாதுகாப்பு சேவைகளின் பணியாளர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதால், சில ஒழுங்குபடுத்தல்கள் அவசியம் என குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, தனியார் பாதுகாப்பு சேவைகளைப் பெறும்போது, அவற்றை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அளவுகோல்களைத் தயாரிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஆலோசனை வழங்குவதற்கு இதன்போது குழு தீர்மானித்தது.

பாதாள உலகத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளின் அதிகரிப்பு குறித்தும் குழுவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. முப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகவும் குழுவில் புலப்பட்டது. குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சில பலவீனங்கள் காணப்படுவதாகப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். தமது பிரதேசங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்குத் திறமையான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இருந்தால், குற்றங்கள் இடம்பெறுவதற்கு முன்னரே தடுக்க முடியும் எனவும், இதன் காரணமாகத் திறமையான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை இனங்கண்டு உரிய பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குழுவில் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகள் ஊடாக போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தும் வகையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயற்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதே போதைப்பொருள் கட்டுப்பாட்டில் முதலில் செய்ய வேண்டியது எனவும் அவர்கள் குழுவில் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

வீதி விபத்துக்கள் காரணமாக நாடு அதிகளவான உயிர்களை இழக்கின்றது என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 30 வருடங்கள் இந்நாட்டில் காணப்பட்ட யுத்தத்தில் 29,000 இராணுவத்தினரே உயிரிழந்தார்கள் எனவும், கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துக்களால் மாத்திரம் சுமார் 27,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குழுவின் தலைவர் இதன்போது நினைவுபடுத்தினார். அதற்கமைய, மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இனங்காண்பதற்குத் தேவையான உபகரணங்களை மிக விரைவில் கொள்வனவு செய்து நாடுபூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்குப் பகிர்ந்தளிக்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

சொத்துக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை மக்களின் கவனக்குறைவு காரணமாகவே இடம்பெறுவதாகவும் பொலிஸார் குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினர். மக்கள் தமது வீடுகள், கட்டடங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது என பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய ஆகியோரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.