`தமிழகத்தில் ஒவ்வொரு கோயிலிலும் சொத்துகளைத் திருடிவருகிறார்கள்' என்ற நிர்மலா சீதாராமனின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“அர்த்தமில்லாத குற்றச்சாட்டு. பரம்பரை பரம்பரையாக இருந்த அறங்காவலர்கள், கோயில் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்ததால்தான் அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டது. தளபதி ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மட்டுமே 5,500 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. 1,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் புனரமைப்புப் பணிகள் நடந்திருக்கின்றன. உலோகச்சிலை, கற்சிலை எனப் பல சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் அரசாக தி.மு.க திகழ்ந்துகொண்டிருக்கிறது. மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க-வுக்கு, மக்கள் தி.மு.க-வைப் புகழ்வது பிடிக்கவில்லை. அதனால்தான் திட்டமிட்டு தி.மு.க-வின் மீது காழ்ப்புணர்ச்சியோடு ‘இந்துக்களுக்கு எதிரான கட்சி’ என்கிற பிம்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது. அதிலும் பா.ஜ.க-வுக்குப் பெரும் தோல்வி மட்டுமே எஞ்சும். கோயில் சொத்துகளைக் கொள்ளையடிப்பது பா.ஜ.க-வுக்குக் கைவந்த கலை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கையே சொல்லியிருக்கிறது. இதில் நிர்மலா சீதாராமன் தி.மு.க-வைக் குறை சொல்லுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. குற்றம் சொல்லும் மத்திய அமைச்சர், எங்கு குற்றம் நடக்கிறது என்று இடம், பொருளோடு சொல்ல முடியுமா… தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கு எதிரான ஓர் எண்ணத்தை ‘பக்தி’ என்ற பெயரில் பகல் வேஷம் போடும் பா.ஜ.க-வால் ஒருபோதும் ஏற்படுத்திவிட முடியாது.”

பழ.செல்வகுமார், ஏ.பி.முருகானந்தம்

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

“உண்மைநிலையைத்தானே சொல்லியிருக்கிறார்… இவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் பக்தர்களின் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, திருச்செந்தூரில் சஷ்டி பூஜை நடைபெறும்போது கட்டணத்தை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஓர் அரசு, பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் அதிகம் வரும்போது கட்டணத்தைக் குறைத்து, மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஆனால், இந்தத் தி.மு.க அரசு அறநிலையத்துறையை வைத்து கட்டணத்தை உயர்த்தி, மக்களின் பணத்தை உறிஞ்சுகிறது. கடந்த ஆண்டு மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ‘அழகர் ஆற்றில் இறங்கும்’ நிகழ்ச்சியில் தகுந்த முன்னேற்பாடுகளை இந்த அரசு செய்யவில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையும் எதுவும் செய்யவில்லை. அதன் விளைவு, இரண்டு பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். அவ்வளவு ஏன்… சமீபத்தில்கூட திருவண்ணாமலைத் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கிப் பலர் பாதிக்கப்பட்டனர். முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் ‘3.7 சதவிகித ஆக்கிரமிப்பு நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக’ கூறுகிறார். அவருக்கு என்ன பதில் சொல்லும் அறநிலையத்துறை… புனரமைக்கப்பட்ட கோயில்களை, சொத்துகளைப் பற்றி வக்கணையாக வாய்கிழியப் பேசும் தி.மு.க அரசுக்கு, இன்னும் மீட்கப்படாத கோயில் சொத்துகள் குறித்தும், புனரமைக்கவேண்டிய கோயில்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வக்கிருக்கிறதா?”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.