`தேசியத் தலைவர் பிரபாகரன்' – திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கமென்ட்டும், ரியாக்‌ஷனும்!

தி.மு.க எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியன், தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், `நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று பதிலளித்தார். ’அவரிடம் நீங்கள் என்ன கேட்பீர்கள்?’ என்ற கேள்விக்கு, “முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு மன்னிப்புக் கோருவேன்” என தமிழச்சி தங்கபாண்டியன் பதிலளித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால்

இந்த வீடியோவை பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், தனது எக்ஸ் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவுக்கு காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் விமர்சனக் கருத்தை முன்வைத்திருந்தார். அதாவது, “பிரபாகரனைப் புகழ்வது காங்கிரஸில் யாருக்கும் பிடிக்காது. 17 தமிழர்களுடன் சேர்த்து ராஜீவ் காந்தியைப் படுகொலைசெய்ததை மழுப்புவதை ஏற்க முடியாது. பிரபாகரன், வீரப்பன் தமிழ்த் தேசியம் என்பது, இந்துத்துவா தேசியவாதத்தைப் போன்றது” என்று காட்டமாகப் பதிவுசெய்திருந்தார்.

குறிப்பாக, விடுதலை புலிகள் பிரபாகரனை சந்தனக் கடத்தல் வீரப்பனோடும், தமிழ்த் தேசியத்தை இந்துத்துவாவுடனும் ஒப்பிட்டு, கார்த்தி விமர்சனம் செய்தது, சமூக வலைதளங்களில் கொத்தளிப்பை ஏற்படுத்தியது.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரத்துக்கு பதிலளிக்கும்விதமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, “தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், பௌத்த சிங்கள பெரும்பான்மைவாதத்துக்கு எதிராகவும், சிறுபான்மைத் தமிழீழ மக்களுக்காகவும் சமரசமற்ற போரை முன்னெடுத்தவர். ஆனால் சனாதான இந்துத்துவா, பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்ட முயல்கிறது. மேதகு பிரபாகரனின் அரசியல் ஒருபோதும் இந்துத்துவா சித்தாந்தத்துக்கு ஆதரவாக இருந்தது இல்லை.

வன்னி அரசு

ராஜீவ் காந்தி கொலையைவைத்து இன்னும் எவ்வளவு காலம் தமிழர்களை கொச்சைப்படுத்துவீர்கள்… தமிழீழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்தில் வாழ்கின்றனர். காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவரவேண்டிய நேரமிது. சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் சித்தாந்தத்தின்படி விடுதலை புலிகளுக்கும், மேதகு பிரபாகரனுக்கும் இந்திரா காந்தியே தனது ஆதரவை வழங்கினார். ராஜீவ் காந்தி கொலையை யாரும் கொண்டாடவில்லை. மேதகு பிரபாகரனை ஆதரிப்பது இந்துத்துவாவை எதிர்ப்பதாகும்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியோ, “முன்னாள் பிரதமரைக் கொன்ற குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அரவணைத்து ஆரத்தழுவி வரவேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி. கட்சித் தலைவரின் உயிரைவிட அதிகாரத்துக்கு ஆளாய் பறக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடூர மனப்பான்மையை, இது வெளிக்காட்டுகிறது. தமிழ்த் தேசியத்தையும், இந்துத்துவ தேசியத்தையும் ஒப்பீடு செய்வது உங்களின் முதிர்ச்சியற்ற, அராஜக எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

நாராயணன் திருப்பதி

இந்துத்துவ தேசியம் என்பது நம் கலாசாரத்தை உணர்த்துகிறது என்பதுகூட உங்களுக்குத் தெரியாததில், வியப்பில்லை. ஆகவேதான் இந்துத்துவ சிந்தனையின்மீது வெறுப்பை உமிழ்கிறீர்கள். இனியும் ராஜிவ் காந்தி மற்றும் 17 தமிழர்களின் படுகொலை குறித்துப் பேசுவதற்கு உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் தகுதியில்லை. அப்படி உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால், வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுங்கள் அல்லது காங்கிரஸ் கட்சியை தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேற்றுங்கள். வெட்கமில்லாதவர்களின் வெட்டிப் பேச்சே இது” என்று கார்த்திக்கு பதிலளித்திருந்தார்.

அதேபோல, தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, “இவர் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்… அந்த நிகழ்வுக்குக் காரணம் தி.மு.க-தான் என்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் தமிழச்சி. குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தி.மு.க எம்.பி தமிழச்சி அளித்த பேட்டிக்கு எதிராகவும், ஆதரவாகும் காங்கிரஸ், வி.சி.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் பேசிவரும் நிலையில், இது குறித்து அ.தி.மு.க-வின் நிலைபாடு என்ன என்பது குறித்து, அ.தி.மு.க வழக்கறிஞர் அணியின் செயலாளர் இன்பதுரையிடம் பேசினோம். “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது ஆட்சியில் இருந்தது தி.மு.க-வும் காங்கிரஸும்தான்.

இன்பதுரை

தற்போது அதற்குக் காரணம் நாங்கள்தான் என்பதுபோல, தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். உண்மையில் தவற்றுக்கு வருந்தும் அவரின் பண்பைப் பாராட்டியே ஆக வேண்டும்” என்றார் நக்கலாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.