கனடா நண்பர் வீட்டில் துப்பாக்கிச்சூடு; கொலை மிரட்டல்… சல்மான் கானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

மும்பையில் வசிக்கும் நடிகர் சல்மான் கானுக்குக் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகக் கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய், இந்தக் கொலை மிரட்டல்களை விடுத்துக்கொண்டிருக்கிறான். பல முறை மிரட்டல் விடுத்திருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்ய மும்பைக்குத் தனது அடியாட்களையும் அனுப்பிவைத்தான். இதையடுத்து சல்மான் கானுக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

சல்மான் கானுடன் கிரேவால்

சல்மான் கான், ராஜஸ்தானில் பிஷ்னோய் இன மக்கள் புனிதமாகக் கருதும் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாகவும், அதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்திருக்கிறான். ராஜஸ்தான் கோர்ட்டுக்கு வெளியில்வைத்தும் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டல் விடுத்தான்.

புதிதாக கனடாவிலுள்ள வான்கூவர் என்ற இடத்தில் வசிக்கும் பஞ்சாப் பாடகர் ஜிப்பி கிரேவால் வீட்டுக்கு வெளியில், சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஜிப்பி கிரேவால் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. எனவே சல்மான் கானுக்கு எச்சரிக்கை செய்ய தாங்கள்தான் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக, லாரன்ஸ் பிஷ்னோய் தெரிவித்திருந்தான். ஆனால் சல்மான் கான் தன்னுடைய நண்பர் கிடையாது என்றும், இரண்டு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருப்பதாகவும் ஜிப்பி கிரேவால் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது மீண்டும் சல்மான் கானை மிரட்டும்விதமாக லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறான். இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் பாடகர் ஜிப்பி கிரேவாலுக்கு லாரன்ஸ் விடுத்திருக்கும் எச்சரிக்கையை, “நீங்கள் சல்மான் கானை ஒரு சகோதரராகக் கருதுகிறீர்கள். இப்போது உங்கள் ‘சகோதரன்’ வந்து உங்களைக் காப்பாற்றும் நேரம் வந்துவிட்டது. இந்தச் செய்தியும் சல்மான் கானுக்குத்தான். தாவூத் உன்னைக் காப்பாற்றுவான் என்ற மாயையில் இருக்க வேண்டாம்; உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. நீங்கள் இப்போது எங்கள் ரேடாரில் வந்துவிட்டீர்கள். இதை ஒரு டிரெய்லராகக் கருதுங்கள்;

லாரன்ஸ் பிஷ்னோய்

முழு படமும் விரைவில் வெளியாகும். நீங்கள் விரும்பும் எந்த நாட்டுக்கும் தப்பிச் செல்லுங்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், மரணத்துக்கு விசா தேவையில்லை; அது அழைக்கப்படாமல் வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறான். லாரன்ஸ் பிஷ்னோயின் புதிய மிரட்டலைத் தொடர்ந்து சல்மான் கானை மும்பை போலீஸார் எச்சரித்திருக்கின்றனர். உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதோடு சல்மான் கான் பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்திருக்கும் போலீஸார், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியிருக்கின்றனர். சல்மான் கானுக்கு ஏற்கெனவே துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு துப்பாக்கி தோட்டா துளைக்காத காரையே சல்மான் கான் பயன்படுத்தி வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.