“ராஜஸ்தானில் ஆட்சியை காங்கிரஸ் தக்கவைக்கும்” – 3 காரணங்களை முன்வைத்த அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் என்னவாக இருந்தாலும் ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், அதற்கான மூன்று காரணங்களையும் அடுக்கினார். மேலும், ராஜஸ்தானில் மட்டும் இல்லை, 5 மாநிலங்களிலும் பாஜக வெற்றியடையாது என்றும் கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “முதலாவதாக ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பலையும் இல்லை. இரண்டாவது காரணம் முதல்வர். வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் முதல்வர் எந்த ஒரு செங்கலையும் விட்டுவைக்கவில்லை என்று பாஜக வாக்காளர்களே கூறுவார்கள். மூன்றாவது, பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திய மொழி. அந்த மொழி யாருக்கும் பிடிக்கவில்லை. பாஜக தலைவர்கள் அச்சுறுத்தும், பயமுறுத்தும் மொழியைப் பயன்படுத்தினர். அது மாநில மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்றார்.

முன்னதாக, கடந்த வாரம் ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘ராஜஸ்தானில் அனைத்து மூலைகளிலும் காங்கிரஸ் தோற்கும், ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும். அசோக் கெலாட்டிடம் சொந்தமாக எந்த கொள்கையும் கிடையாது. அவர் என்ன வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார்’ என்று சாடினார்.

அதேபோல் இந்த மாதம் தொடக்கத்தில் ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அசோக் கெலாட்டை மந்திரவாதி என்று கூறினார். பிரச்சாரத்தில் பேசிய பிரதமர், “ராஜஸ்தான் மக்கள் ஒரு மந்திரவாதிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் முற்றிலுமாக வெளியேற்றப்படும். டிசம்பர் 3-ம் தேதி காங்கிரஸுக்கு ச்சூ மந்திரம் நடக்கும். காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தை ஊழல், கலவரங்கள் மற்றும் குற்றங்களில் முதலிடம் பிடிக்க வைத்துள்ளது. அதனால்தான் ராஜஸ்தான் மக்கள் ‘மந்திரவாதி ஜி… உங்களுக்கு எந்த ஒரு ஓட்டும் கிடைக்காது’ என்று சொல்கிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு நவ.25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன. கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.