வெள்ள நிவாரண விவகாரம்: நிர்மலா சீதாராமன் மூலம் அரசியல் ஆக்குகிறதா பாஜக?!

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான், குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டி தீர்த்தது.

மிக்ஜாம் புயல் – மழை வெள்ளம்

சுமார் 30 மணி நேரத்துக்கு மேல் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. அம்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தசூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ளபாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கமுடியாது என்று சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, நிவாரண தொகையை வங்கியில் செலுத்த வேண்டியது தானே உள்ளிட்ட சில கேள்விகளை முன்வைத்தார். இதற்கு தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தான் வெள்ளம் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு வாரத்துக்கு பின்னர் அப்பகுதிகளில் இன்று ஆய்வு செய்யவுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா.

மழை, வெள்ளம் சூழ்ந்த வீடு

இது குறித்து தி.மு.க செய்தி தொடர்புக்குழு துணைச் செயலாளர் வழக்கறிஞர் சித்திக்கிடம் பேசினோம். “நாடாளுமன்ற அவைக்குள் இருவர் புகுந்து புகை குண்டுகளை வீசியிருக்கிறார்கள். இந்த அத்துமீறல் குறித்து பேச ஒன்றிய அமைச்சர்களுக்கு தைரியமில்லை. இந்த சம்பவம் குறித்து அவைக்குள் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. நாட்டின் உயரிய பாதுகாப்பான ஏற்பாடுகள் கொண்ட நாடாளுமன்ற அவைக்குள்ளே இருவர் புகுந்து தாக்கல் நடத்திய விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தாத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பில் அரசியல் செய்யவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு கேட்ட நிதியை கொடுத்ததே இல்லை. தற்போது ஏற்பாட்ட வெள்ள பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் குஜராத்தில் தாட்கோ புயலின்போது அடுத்த நாளே ஆயிரம் கோடியை ஒதுக்கியது மோடி அரசு. மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டத்தில் பெய்த கனமழை பாதிப்புக்கு நிவாரணமாக தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை கொடுக்காமல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒன்றிய அரசு நடந்துக் கொண்டது. தமிழ்நாடு மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் பா.ஜ.க-வுக்கு இருக்கும் ஓரவஞ்சக எண்ணம் தற்போது அம்மலப்பட்டுவிட்டது.

சித்திக்

இதை மறைக்கதான், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற முகத்திரையை மாட்டிக் கொண்டிருக்கும் நிர்மலா சீதாராமன் வைத்து பேசவைக்கிறது பா.ஜ.க. ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிர்மலா சீதாராமனின் முகத்திரையை கிழித்தெறிந்துவிட்டார். மயிலாப்பூருக்கு காய்கறி வாங்க வர தெரிந்த நிர்மலா சீதாராமனுக்கு, வெள்ள பாதிப்புகளை பார்வையிட வர மனமில்லை என்ற அமைச்சர் தங்கம் தென்னரசுவின் விமர்சனம் டெல்லியை உலுக்கிவிட்டது.

உண்மையில் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோதே களத்துக்கு வந்திருக்கலாமே. ஆனால், களத்தில் இருந்த எங்களை குறை சொல்லி, மாட்டிக் கொண்ட நிர்மலா சீதாராமன் இப்போது அவசர அவசரமாக தமிழ்நாட்டை தேடி ஓடி வருகிறார். பாஜகவின் இந்த அரசியலை தமிழ்நாடு மக்கள் நன்கு புரிந்து வைத்து இருக்கிறார்கள். பாஜகவின் அரசியல் விளையாட்டு தமிழ்நாட்டு மண்ணில் எடுப்படாது.” என்றார் காட்டமாக.

மறுபக்கம் பாஜக-வினரோ, “மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மாநில அரசு குற்றம் சாட்டியதற்கு தான் நிதியமைச்சர் என்ற முறையில் அதற்கு விளக்கம் அளித்தார். மேலும் தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை எதுவும் இல்லை என்ற நிதர்சனத்தை விளக்கினார். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் வந்த போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். தென் மாவட்ட பாதிப்புகளை நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொள்கிறார். அவ்வளவு தானே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.