இங்கிலாந்து: மெய்நிகர் வீடியோ கேமில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு

லண்டன்,

தொழில்நுட்ப உலகில் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம், தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சினிமா, வீடியோ கேம் உள்ளிட்ட பல தளங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பார்வையாளர்களை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் மெய்நிகர் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’, இந்த மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ‘மெட்டாவெர்ஸ்’ என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ கேமில், சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு ஒன்று பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ‘மெட்டாவெர்ஸ்’ மெய்நிகர் வீடியோ கேம் ஒன்றை விளையாடியுள்ளார். இதற்கான பிரத்யேக கண்ணாடி மற்றும் ஹெட்செட்டுகள் மூலம் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. இதை விளையாடுபவர்களுக்கு ‘அவதார்’ எனப்படும் டிஜிட்டல் கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் டிஜிட்டல் கதாபாத்திரத்தை வேறு சில ‘அவதார்கள்’ இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை விசாரித்து வரும் போலீசார், சிறுமிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், உளவியல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பதிவான முதல் வழக்கு இது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இது போன்ற செயல்பாடுகளுக்கு எங்கள் தளத்தில் இடமில்லை. பயனாளர்களின் பாதுகாப்பிற்காகவே, அறிமுகம் இல்லாத நபர்களின் அவதார்களை அருகில் நெருங்க விடாத வகையிலான வசதிகள் இதில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.