இந்திய அணி தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது – இர்பான் பதான்

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள இந்தியா குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாடுகிறது.

முன்னதாக தற்போது ஷமி, பும்ரா, சிராஜ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட தென் ஆப்பிரிக்காவில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி இந்தியா இம்முறை முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் முகமது ஷமி காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை.

இந்நிலையில் இந்திய அணி தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவும் காயத்தை சந்தித்து வெளியேறியிருந்தால் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று இர்பான் பதான் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியா தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் தற்போது என்ன நடந்துள்ளது என்பதை பாருங்கள். அதாவது நம்முடைய பேக்-அப் வீரர்கள் தயாராக இல்லை. நம்மிடம் தரத்தில் பஞ்சம் இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஷமி இல்லாத சூழ்நிலையில் அவர்கள் அசத்துவதற்கு தயாராக இல்லை. ஒருவேளை பும்ராவும் காயமடைந்து வெளியேறி விட்டால் நம்மிடம் அவருடைய இடத்தை நிரப்புவதற்கான தரமான பவுலர் இல்லை. எனவே இந்தியா விரைவில் 7 முதல் 8 வேகப்பந்து வீச்சாளர்களை தயாராக வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.