INDvsSA 2nd Test: 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி.. ஆனாலும் ஒரே ஒரு குறை

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1- 1 என சமன் செய்தது. முதல் இன்னிங்ஸில் முகமது சிராஜ், இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முதுகெலும்பாக இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டானார்கள். முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களுக்கும், இந்தியா 153 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிராஜ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா அணியில் நிகிடி, ரபாடா, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய மார்கிரம் 103 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் யாரும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து இந்திய அணி 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் வந்த ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடினார். அவருடைய ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது. 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெய்ஷ்வால் அவுட்டானார். அடுத்து வந்த கில் 10 ரன்களுக்கும், விராட் கோலி 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

 January 4, 2024

இருப்பினும் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 80 ரன்கள் எடுத்து இந்த டெஸ்டில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஸ்ரேயாஸ் 4 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.

January 4, 2024

ஆட்டநாயன் விருது முகமது சிராஜூக்கும், தொடர் நாயகன் விருது டீன் எல்கர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் இருந்த ஒரே ஒரு குறை என்னவென்றால் எளிய இலக்கு என்பதால் விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.