ஐபிஎல் 2024: மார்ச் 22 முதல் தொடங்கும், இந்தியாவில் நடக்கும் – ஜெய்ஷா கொடுத்த அப்டேட்

இந்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், ஐபிஎல் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தேர்தல் நடைபெறும் நகரங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால், அங்கு நடைபெறும் போட்டிகள் மற்ற மைதானங்களில் நடத்தப்படும். அதாவது, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்த பின்னர் ஐபிஎல் போட்டிகளின் மைதானங்கள் மாற்றம் குறித்த உறுதியான தேதி வெளியாகும். இப்போது, ஐபிஎல் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருப்பதால் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த போட்டிகள் நடைபெறும் என்பது மட்டும் பிசிசிஐ தீர்மானித்திருக்கிறது.

அதற்கேற்ப பத்து அணிகளும் ஐபிஎல் போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். போட்டி நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும். தேர்தல் தேதியைப் பொறுத்து அணிகள் மோதும் மைதானங்கள் மட்டும் இறுதி செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா, ஐபிஎல் போட்டியை இந்தியாவில் முழுமையாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதற்காக மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் தேர்தல் நடக்கும்போது ஐபிஎல் போட்டிகளும் நடைபெறும்பட்சத்தில் பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சனை உருவாகும். அதற்காக முன்கூட்டியே மத்திய அமைச்சர்களுடன் ஜெய்ஷா ஆலோசனை நடத்தி பாதுகாப்பு பிரச்சனைகள் ஏதும் வராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளார். 

அத்தகைய பிரச்சனைகள் வராமல் இருக்கவும், தேர்தல் நடைபெறும் இடத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் ஐபிஎல் போட்டி அட்டவணை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய தகவல்படி மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என கூறப்படுகிறது. உத்தேசமாக எந்தெந்த அணிகள் எப்போது மோதும் என்ற அட்டவணை தயாராகிவிட்டதாம். ஆனால் எங்கு போட்டி நடக்கும் என்பது மற்றும் இறுதி செய்யப்படவில்லை. 

இதேபோல் பெண்க் ஐபிஎல் எனப்படும் WPL இரண்டாவது சீசன் இந்த முறை இரண்டு நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை WPL போட்டிகள் டெல்லி மற்றும் பெங்களூருவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு, WPLன் அனைத்து போட்டிகளும் மும்பையில் நடந்தன, அதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் உட்பட ஐந்து அணிகள் WPL-ல் விளையாடுகின்றன. இந்த போட்டிகள் பிப்ரவரி இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.