ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த வார்னர்… அதுவும் மைதானத்திலேயே – ஏன் தெரியுமா?

David Warner Helicopter Entry: விளையாட்டு வீரர்கள் என்றாலே மிகவும் கட்டுக்கோப்புடன் இருப்பவர்கள் என்ற பிம்பம் முன்னொரு காலத்தில் இருந்தது. தற்போதைய சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் விளையாட்டு வீரர்கள் என்றில்லை பிரபலங்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரின் மறுபக்கங்களும், மறுபக்கங்கள் என காட்டப்படுபவையும் மக்களின் கண்களையும், செவிகளையும் வந்தடைகின்றன. மேலும் பிரபலங்கள் தங்களின் பிராண்ட் வேல்யூவை அதாவது செல்வாக்கை அதிகரித்து கொள்ளவும் ரீல்ஸ் செய்வது, அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு (?) பதிலளிப்பது, வைரலாகும் வகையில் பேசுவது போன்ற கவன ஈர்ப்பில் ஈடுபடுவார்கள். 

சிலர் இதனை இயல்பாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் கூட செய்வார்கள் எனலாம். அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இதில் எந்த வகையில் வருவார் என்பது அவரவர் புரிதலுக்கு விட்டுவிடலாம். இருப்பினும், ஒரு கிரிக்கெட் வீரராக அவரின் துணிச்சலும், ஆக்ரோஷமும், துடிப்பும் யாராலும் கேள்விக்குட்படுத்தவோ அல்லது ஒரு பொருட்டாக மதிக்காமல் உதாசினப்படுத்தவோ இயலாது என்பது மட்டும் நிச்சயம். 

மாஸ் என்ட்ரி கொடுத்த வார்னர்

சமீபத்தில், அவரது டெஸ்ட் ஓய்வையொட்டி முன்னாள் ஆஸி., வீரர் மிட்செல் ஜான்சன் மற்றும் வார்னர் ஆகியோருக்கு இடையே நடந்த பனிப்போரை பலரும் அறிவார்கள். அதற்கு வார்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தனது பேட் மூலம் பதில் சொல்லி ஜான்சனின் வாயை அடைத்தது அவரின் சமீபத்திய சம்பவம் எனலாம். அப்படியிருக்க, சில தினங்களுக்கு முன்னரே சிட்னி மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் அரைசதம் அடித்து ஓய்வு பெற்றிருந்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் சாம்பியனாக ஆஸ்திரேலிய விளங்கும் இந்த வேளையிலேயே அவர் இந்த இரண்டு பார்மட்டில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்.

டி20யில் மட்டும் இனி அவர் கவனம் செலுத்துவார் என தெரிகிறது. பிபிஎல், ஐபிஎல் போன்ற பெரிய டி20 தொடர்களுடன் சர்வதேச அளவில் வரும் ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 தொடரான பிக்பாஷ் லிக்கில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த போட்டிக்கு அவர் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கியதுதான் இன்றைய சமூக வலைதள வைரல் வீடியோவாக உருவெடுத்துள்ளது. 

Never thought I would see this at a cricket ground!!! @BBL pic.twitter.com/7SSEjYatTK

— Lisa Sthalekar (@sthalekar93) January 12, 2024

மைதானத்தில் லேண்டிங்

எந்த மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடிவிட்டு மக்களிடம் பிரியாவிடை பெற்று சென்றாரா அதே மைதானத்தில் டி20 போட்டியை விளையாட வார்னர் இந்த மாஸ் என்ட்ரியை கொடுத்துள்ளார். ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த தனது சகோதரரின் திருமணத்திற்கு வார்னர் இன்று சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து சில மணி நேரங்களுக்கு முன்பு ஹெலிகாப்டரில் சிட்னி வந்தார். 

Ever seen anything like it? @davidwarner31 arrives to the @scg on a helicopter to the Sydney Smash. #BBL13 pic.twitter.com/gS4Rxmz71C

— KFC Big Bash League (@BBL) January 12, 2024

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை லிசா ஸ்டாலேகர் வெளியிட்டுள்ள வீடியோவில், “டேவிட் வார்னரை ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர் சிட்னி கிரிக்கெட் மைதானத்தை ஒரு வலம் வந்து, இறுதியாக தரையிறங்கியது. அங்கு சில ஊடகங்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் வார்னரை வரவேற்க காத்திருந்தனர்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, வார்னர் அலையன்ஸ் மைதானத்தில் தரையிறங்க திட்டமிட்டிருந்தார். இருப்பினும், சிட்னி கிரிக்கெட் மைதானம் தயார் செய்யப்பட்டது, இறுதியில் வார்னர் சிட்னி தண்டரின் பரம போட்டியாளர்களான சிட்னி சிக்ஸர் அணிக்கு எதிரான மோதலுக்கு சரியான நேரத்தில் வந்தடைந்தார்.

ஹாலிவுட்டும் வார்னரும்

வார்னரின் மாஸ் என்ட்ரி குறித்து சக நாட்டு வீரரும், சிட்னி சிக்ஸர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளருமான சீன் அபாட் கருத்து தெரிவித்திருந்தார். அதில்,”அவர் கொஞ்சம் ஹாலிவுட் தன்மையுடவர். வார்னர் எப்போதும் அப்படிதான். நான் இன்று ஒரு பைக்கைப் பெற்றேன். நானும் வார்னர் வந்தது போல் எனது பைக்கில் இதே வாயிலில் சவாரி செய்ய உள்ளேன். அவர்கள் அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் கிரிக்கெட்டை விரும்பும் நாட்டில் உள்ள அனைவரும் உங்களை பார்க்க விரும்புகிறார்கள். பிபிஎல்லில் டேவிட் வார்னரும் அவருக்கு எதிராக களமிறங்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் மற்றும் நீண்ட காலமாக விளையாடி வருபவர்” என டேவிட் வார்னர் குறித்து அபாட் பேசியிருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.