Hindus are allowed to worship in the basement of the Gnanawabi campus | ஞானவாபி வளாக பாதாள அறையில் ஹிந்துக்கள் வழிபட அனுமதி

வாரணாசி, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் ஹிந்து பூஜாரியின் குடும்பத்தார் வழிபாடு செய்வதற்கு, மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது. ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது இந்த வளாகம் கட்டப்பட்டதால், அதை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கோவில் மீது மசூதி கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஞானவாபி வளாகத்தின் தரை தளத்துக்கு அடியே நான்கு பாதாள அறைகள் உள்ளன. இவற்றில், ஒரு அறையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜாரியாக இருந்த சோம்நாத் வியாஸ், 1993 வரை பூஜைகள் செய்து வந்தார்.

கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், இந்த அறையை மூட, அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சோம்நாத் வியாசின் பேரனான சைலேந்திர குமார் பதக், அந்த அறையில் தொடர்ந்து பூஜைகள் செய்வதற்கு அனுமதி கேட்டு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், அந்த இடத்தில், பூஜாரி சோம்நாத் வியாசின் குடும்பத்தினர் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது. இதன்படி, காசி விஸ்வநாதர் கோவில் பூஜாரிகள் அங்கு பூஜைகள் செய்ய முடியும்.

அந்த பாதாள அறைக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை ஒரு வாரத்துக்குள் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஞானவாபி வளாகத்தில் உள்ள வஹுகானா எனப்படும், கால்களை சுத்தப்படுத்தும் தொட்டி பகுதியில், தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரி, ஹிந்துக்கள் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும்படி, ஞானவாபி வளாகத்தை நிர்வகிக்கும் முஸ்லிம் அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.