Santhosh Narayanan: "அறிவுக்கு இன்வைட் அனுப்பியிருக்கேன். ஆனா…"- சர்ச்சை குறித்து சந்தோஷ் நாராயணன்

`நீயே ஒளி’ இசைக்கச்சேரி பற்றிய செய்தியாளர் சந்திப்பில், பாடலாசிரியர் அறிவு பற்றிய கேள்விக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிலளித்திருக்கிறார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில்  பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது. இப்பாடலை எழுதிய பாடகர் அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் அவரின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் அறிவு இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

அறிவு

“இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்களாகத் தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன்” என்றும் “உண்மைதான் எப்போதும் வெல்லும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “நான் வெளிப்படைத் தன்மையுடனே இருக்க விரும்புகிறேன். தீ, அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் பணியாற்றி, சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு எந்தவொரு பாரபட்சமின்றி கிரெடிட்ஸ் கொடுத்துள்ளேன். ‘என்ஜாயி என்ஜாமி’ ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சே அதற்குச் சாட்சி” என்று கூறியிருந்தார். 

Santhosh Narayanan

இந்நிலையில் நீயே ஒளி இசைக்கச்சேரி வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதன் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  அதில் பாடலாசிரியர் அறிவு குறித்து சந்தோஷ் நாராயணனிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அவர், “அறிவுக்கு இன்வைட் அனுப்பியிருக்கிறேன். அவர் என் நம்பரை பிளாக் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அதனைப் பார்த்துவிட்டு வந்தால் மகிழ்ச்சி.

Santhosh Narayanan

தீ மற்றும் அறிவு பாடிய பாடல்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் பிரச்னையால்தான் அவை அப்படியே இருக்கின்றன. காத்திருந்தால் எல்லாம் சரியாகும். கோபமாக இருப்பவர்கள் எதனால் இந்தப் பிரச்னை நடந்தது எனப் புரிந்தபின் சரியாகிவிடும். அதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.