‘பாஜக வெற்றியை கணிக்க நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல’ – குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றியை கணித்து கூறுவதற்கு நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல என்றார் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலம் நபி ஆசாத்.

சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள ஜம்முவின் புறநகர் பகுதியான கர்கல் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: பி.வி. நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. நாட்டிற்காக அவர்கள் அளித்த சிறந்த பங்களிப்புக்காக இந்த விருதைப் பெறுவதற்கு அவர்கள் முழு தகுதி உடையவர்கள்.

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுமா என்பதை சொல்வதற்கு நான் ஒன்றும் ஜோசியக்காரன் கிடையாது. அதேசமயம், அவர்கள் 400 இடங்களுக்கு மேல் பெறுவார்களேயானால் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கத் தவறிய இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்ற கட்சிதான் அதற்கான முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.

என்னைப் பொருத்தவரையில் பாஜக, காங்கிரஸ் எந்த கட்சி தவறு செய்தாலும் அதனை நான் முதலில் விமர்சிப்பேன். அதேபோன்று நல்லது செய்தால் அதை பாராட்டும் முதல் ஆளாக நானிருப்பேன். நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நான் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தபோது மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கினார்.

அவருடைய தாராளமயமாக்கல் கொள்கைதான் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது. ராவ் கொண்டு வந்த அதே கொள்கையைத்தான் தற்போது மோடி அரசும் பின்பற்றி வருகிறது. தேசத்தின் நலனுக்காக அந்த தலைவர்கள் ஆற்றிய பணியை அங்கீகரித்த பிரதமர் பாராட்டப்பட வேண்டியவர்.

பாகிஸ்தான் இன்னும் சர்வாதிகாரத்தின் பிடியில்தான் உள்ளது. வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதிலும், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதையும் ராணுவம் தான் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இந்தியாவில் அதுபோன்ற சூழல் இல்லை. அதுதான் ஜனநாயகம். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.