"என் கனவுக்காக வேலை பார்த்தவர் வெற்றி துரைசாமி; அவரின் இழப்பு…" – கண்கலங்கிய வெற்றிமாறன்

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமியின் திடீர் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை மேலாண்மை செய்துகொண்டிருந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் `என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதையடுத்து தனது இரண்டாவது படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காக சிம்லா சென்றுவிட்டுத் திரும்பியபோது (பிப்ரவரி 4-ம் தேதி) இவரின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துள்ளாகியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 8 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட இவரின் உடல் நேற்று (பிப்ரவரி 13ம் தேதி) சென்னை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. வெற்றி துரைசாமியின் இந்த திடீர் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘IIFC’ நடத்திய வெற்றி துரைசாமியின் இரங்கல் கூட்டம் | வெற்றிமாறன்

இந்நிலையில் வெற்றி துரைசாமியுடன் நெருக்கமான நட்பில் இருந்த இயக்குநர் வெற்றிமாறன், தனது ‘IIFC’ கல்வி நிறுவனத்தின் சார்பாக இரங்கல் கூட்டம் ஒன்றை இன்று நடத்தியிருந்தார். அதில் வெற்றி துரைசாமியுடனான நட்பு குறித்து கண்கலங்கியபடிய பேசியவர், “வெற்றி துரைசாமி என்கிட்டதான் சினிமா கற்றுக்கிட்டதாகச் சொல்வார். ஆனால், உண்மையில் அவர்தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். எங்கள் இருவருக்கும் இருக்கும் பொதுவான குணங்கள் பறவைகள், விலங்குகளை நேசிப்பது.

நிறைய தேடல் இருக்கிற மனிதர் அவர். நல்ல வைல்ட் லைஃப் போட்டோகிராபர். அதில் நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளார். கடந்த வருடம் ஆப்பிரிக்கா சென்று கொரில்லா குடும்பத்தை போட்டோ எடுத்தார். ஆர்டிக் பகுதிகளுக்குச் சென்று பனிக்கரடிகளைப் போட்டோ எடுத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது பனிச்சிறுத்தையை (Snow leopard) போட்டோ எடுக்கச் சென்று உயிரிழந்துள்ளார்.

பயணங்கள் மீது ஆர்வம் கொண்டவர், எதையும் தேடி கற்றுக் கொள்பவர். கடந்த பத்து ஆண்டுகளாக நான் செய்த பணிகள் அனைத்திலும் அவரது பங்கு ஏதோவொரு விதத்தில் இருந்திருக்கிறது. பறவைகள், தோட்டத்திற்கு மாடுகள், வீட்டிற்கு இசைக் கருவிகள் என நான் வாங்க விரும்புவதை, அவரே முன் வந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்படி என்னுடைய நிறைய விஷயத்தில் அவரது பங்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

வெற்றி துரைசாமி, அவரது தந்தை சைதை துரைசாமி

அப்படித்தான் நாங்கள் ‘IIFC’ ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது, அதற்கு இடம் கொடுத்தார். அவர் அதைச் செய்யவில்லை என்றால் இந்த ‘IIFC’ கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நீண்ட காலமாகியிருக்கும். இவ்வளவு அர்பணிப்புடன் இன்னொருவர் கனவுக்காக வேலை பார்ப்பதற்கு யாருக்கும் அவ்வளவு எளிதாக மனம் வராது. எப்போதும் உதவி செய்யும் பழக்கம் கொண்டவர்களுக்கு மட்டுமே இப்படியான மனம் இருக்கும். அவருடைய அப்பாவின் ‘மனிதநேய அறக்கட்டளை’யிலும் நிறைய பணிகள் செய்திருக்கிறார்.

எப்போதும் சிரித்த முகத்துடனே எல்லோரிடமும் பழகுபவர். மனிதர்களிடம் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருப்பவர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத பெரிய இழப்பு. காலம், இந்த மாதிரியான கடினமான சூழ்நிலைகளுக்கு நம்மை ஆளாக்கிக்கொண்டே இருக்கிறது.

வெற்றி துரைசாமி

தன்னுடைய முதல் படத்தை முடித்துவிட்டு, இரண்டாவது படத்தை எடுத்துக் கொண்டிருந்தவர். அவரின் நினைவாக எங்கள் ‘IIFC’ சார்பில் விருதுகள் வழங்கலாம் என்று நினைத்துள்ளோம். அவ்வகையில் ‘IIFC’- சார்பாக முதல் தமிழ் படம் எடுப்பவர்களுக்கும், வைல்டு லைஃப் போட்டோ எடுப்பவர்களுக்கும் அவரது பெயரில் விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இது குறித்து தெளிவாகத் தெரிவிப்போம்.

வாழ்க்கையில் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறோம், கடந்து செல்கிறோம், இழக்கிறோம், பெறுகிறோம். ஆனால், அதில் ஒரு சிலரின் இழப்புதான் நம்மில் கொஞ்சத்தை எடுத்துச் சென்றுவிடுகிறது. ‘We lose a part of ourselfs in someone Death’. அப்படியான மறைவுதான் வெற்றி துரைசாமியின் மறைவு எனக்கு” என்று தழுதழுத்தக் குரலில் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.