60 வயதில் காதலியை கரம் பிடிக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி,

ஆஸ்திரேலிய பிரதமராக இருப்பவர் அந்தோணி அல்பானீசு. இவரது நீண்டநாள் காதலியான ஜோடீ ஹெய்டன் என்பவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவை அவர் இன்று வெளியிட்டு உள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே திருமண நிச்சயம் நடந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் மெல்போர்ன் நகரில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக ஹெய்டனை, அல்பானீசு சந்தித்து பேசினார். இதன்பின்னர், 2022-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலின்போது, பிரசாரத்தில் அவருடன் அல்பானீசு ஒன்றாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அல்பானீசு பிரதமரான பின்னர் துபாய், மேட்ரிட், பாரீஸ், லண்டன் மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும்போது அவருடன் ஒன்றாக ஹெய்டன் சென்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவின்போதும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்து நிகழ்ச்சி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர்.

இந்த தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார். பதவியில் இருக்கும்போது, திருமண நிச்சயம் நடந்த முதல் பிரதமர் ஆவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி செல்பி புகைப்படம் ஒன்றையும் அவருடைய சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து கொண்டார். அதில், ஹெய்டன் சரி என்று கூறினாள் என தலைப்பிட்டு உள்ளார். ஹெய்டன் பெண்களுக்கான வழக்கறிஞராக உள்ளார். அல்பானீசுக்கு முதல் திருமணத்தின் வழியே நாதன் அல்பானீசு என்ற மகன் ஒருவர் உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.