Sarfaraz Khan: `அப்பா முன் விளையாடவேண்டும் என்பது வாழ்நாள் கனவு!' – சர்ஃபராஸ் கான் உருக்கம்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் சர்ஃபராஸ் கான் அறிமுகமாகியிருந்தார்.

அவரின் தந்தை முன் முதல் ஆட்டத்தை ஆடிய காட்சிகள் அத்தனை பேரையும் நெகிழச் செய்திருந்தது. அந்த பொன்னான தருணங்களைப் பற்றியும் போட்டியின் போது நடந்த ரன் அவுட் பற்றியும் சர்ஃபராஸ் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

Sarfaraz

அவர் பேசியிருப்பதாவது, “ரன்கள் அடிப்பதைப் பற்றியோ என்னுடைய செயல்பாடுகள் பற்றியோ நான் யோசிக்கவில்லை. இந்தியாவுக்காக என் தந்தையின் முன் ஆடுவதுதான் எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. முதலில் என் அப்பா போட்டியை நேரில் வந்து பார்ப்பதாக இல்லை. ஆனால், பலரும் அவரிடம் போட்டிக்கு நேரில் செல்லுமாறு வலியுறுத்தியிருக்கின்றனர். இந்த நாளுக்காகத்தான் அவர் கடினமாக உழைத்திருந்தார். நான் அனில் கும்ப்ளேவின் கையிலிருந்து தொப்பியை வாங்குகையில் என்னுடைய தந்தை ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். எனக்காகவும் இந்த நாளுக்காகவும் அவர் கடினமாக உழைத்திருக்கிறார். அதையெல்லாம் வீணாக்கிவிடக்கூடாது என்கிற பொறுப்பு எனக்கு இருந்தது.

இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. ஆனால், சில காரணங்களால் அது நிகழாமல் போய்விட்டது. 6 வயதிலிருந்து எனக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுத்து வருகிறார். அப்போதிருந்தே இந்திய அணிக்காக அவரின் முன்பு ஆட வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது.

Sarfaraz’s Father

என் வாழ்வின் பெருமைமிக்க தருணம் இதுதான். நான்கு மணி நேரமாக பேடை கட்டிக்கொண்டு பேட்டிங் இறங்கக் காத்திருந்தேன். எவ்வளவோ காத்திருந்துவிட்டோம் இன்னும் சில மணி நேரம்தானே என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். பேட்டிங் ஆடும்போது என்னிடம் பேசிக்கொண்டே இருங்கள் என ஜடேஜாவிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் எனக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே இருந்தார்.

Sarfaraz & Jadeja

தகவல்பரிமாற்றத்தில் சிக்கல் எழுவது கிரிக்கெட்டில் வழக்கம்தான். அதன்மூலம் சில சமயங்களில் ரன் அவுட்கள் நிகழலாம். கிரிக்கெட்டில் இதுவும் கூட ஒரு பகுதிதான்.’ என்றார்.

சர்ஃபராஸ் கான் பத்திரிகையாளர் சந்திப்பு அறையை விட்டு வெளியேறுகையில் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட் சர்ஃபராஸை சந்தித்து மனதாரப் பாராட்டியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.