`இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதுவும் கூறமுடியாது..!' – ப.சிதம்பரம் சொல்வதென்ன?

பீகாரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16 கட்சிகளாகவும், அதற்கடுத்த மாதம் 28 கட்சிகளாகவும் இணைந்து `இந்தியா’ என்ற பெயரில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கூட்டணியாக உருவெடுத்த எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க தனித்து போட்டியிடுவதாகவும், கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் வரிசையாக அறிவித்து வருகின்றன. முதலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தங்கள் மாநிலத்தில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவிக்க, அவரைத் தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார்.

இந்தியா கூட்டணி – மோடி

பின்னர், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியிலிருந்தே விலகினார். இன்னொருபக்கம், சௌத்ரி சரண் சிங்குக்கு பா.ஜ.க அரசு பாரத ரத்னா அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, இந்தியா கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரிய லோக் தளம் விலகுவதாக சௌத்ரி சரண் சிங்கின் பேரனும், கட்சியின் தலைவருமான ஜெயந்த் சிங் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, டெல்லியில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என கெஜ்ரிவால் அறிவிக்க, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய சில நாள்களில் ஜம்மு காஷ்மீரில் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என ஃபரூக் அப்துல்லா நேற்று அறிவித்தார். இவ்வாறு, நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என அறிவித்த கூட்டணி கட்சிகள் அனைத்தும், இந்தியா கூட்டணியில் தொடர்வதாகவே தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து தன்னால் எதுவும் கூற முடியாது எனக் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

ப.சிதம்பரம்

தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இந்தியா கூட்டணி குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், “கூட்டணியின் பேச்சுவார்த்தைக் குழு மற்றும், கூட்டணியின் அடுத்தடுத்த கூட்டங்களின் ஓர் அங்கமாக நான் இல்லாததால், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. என்னுடைய தகவல் என்பது இரண்டாம்நிலை அல்லது மூன்றாம் நிலை மட்டுமே. அதேசமயம், மோடியும், பா.ஜ.க-வும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிராந்திய கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதை, கூட்டணியில் எஞ்சியிருக்கும் அனைத்துக் கட்சிகளும் புரிந்துகொள்ளும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.