`தேர்தல் பத்திரத்தை ரத்து செய்து அளித்திருக்கிற தீர்ப்பு, வரவேற்கத் தகுந்தது!' – தொல்.திருமாவளவன்

திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

“தென்னக ரயில்வேயின் முன்னணி அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே வழக்கமான கலந்தாய்வு கூட்டம் திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும், நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று இரண்டு தொகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்திருக்கிறோம். குறிப்பாக, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நீண்ட காலமாக மக்கள் முன்வைத்து வரக்கூடிய கோரிக்கை ஜனசதாப்தி ரயிலும், மைசூர் விரைவு வண்டியும் மயிலாடுதுறை வரையில் வந்து போகிறது. அவை இரண்டையும் சிதம்பரம் வழியாக கடலூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொது மேலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவற்றை பரிசீலித்து ரயிலுக்கான நேரம் தொடர்பான சிக்கல்களை எல்லாம் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொது மேலாளர் கருத்து தெரிவித்திருக்கிறார். மீண்டும் கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்று பொது மேலாளரை அங்கேயும் சந்தித்து இந்த கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு விளக்கங்களை முன் வைத்தோம். பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். அடுத்து மும்பையில் இருந்து திருநெல்வேலி வரையில் விழுப்புரம் மதுரை வழியாக ரயில் விட வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை தென்னக ரயில்வே பொது மேலாளரின் பார்வைக்கு கொண்டு சென்றோம். சென்னை வரையில் வரக்கூடிய விரைவு வண்டியை விழுப்புரம், மதுரை வழியாக திருநெல்வேலி வரையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறோம்.

தொல்.திருமாவளவன்

அதனை செய்வதற்கு என்ன சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பதை கண்டறிந்து, அதனடிப்படையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகளும் இணைந்து கொண்டோம். அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்திருந்தோம். பல கட்சிகள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகளும் அதே வேண்டுகோளை முன்வைத்து வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தல் பத்திரம் Electoral Bonds

அரசியல் கட்சிகள் பெரு நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியை பெறக்கூடிய அந்த தேர்தல் பத்திரம் செல்லாது… நடைமுறையில் இருக்காது என தீர்ப்பையும் வழங்கி இருக்கின்றனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனபூர்வமாக வரவேற்கிறது. இதனால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. பா.ஜ.க அளவுக்கு மற்ற கட்சிகள் பெரிய அளவுக்கு பெரிய நிறுவனத்திடம் இருந்து நிதிகள் பெறவில்லை. அவற்றை வெளிப்படையாக காட்டி இருக்கிறது. பா.ஜ.க தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலித்திருக்கிற தொகை ரூ. 6,600 கோடி என்று தெரியவருகிறது. பெரிய நிதியை திரட்டி இருக்கிற ஒரே கட்சி பா.ஜ.க. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் நிதியை யார் திரட்டி இருந்தாலும் அது ஏற்புடையது அல்ல. உச்ச நீதிமன்றம் இந்த தேர்தல் பத்திரத்தை ரத்து செய்து அளித்திருக்கிற தீர்ப்பு, வரவேற்கத் தகுந்தது… பாராட்டக்கூடியது. இந்த தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனபூர்வமாக பாராட்டி வரவேற்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.