தமிழக பட்ஜெட்டுக்கு தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டுக்கு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: மத்திய அரசு இதுவரை பேரிடர் நிதியிலிருந்து நிதி அளிக்காமல் துரோகம் செய்கிறது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்த்தது, பல துறைகளுக்கு நிதி கூடுதலாக ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இடை பாலினத்தவர்களுக்கு கல்வி, விடுதி இலவசமாக வழங்குவதும், கல்லூரி கல்வி செலவை அரசே ஏற்பதும் அவர்களின் சமூக ஒப்புதலுக்கு வழிவகுக்கும். உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்ப்புதல்வன் திட்டமும் வர வேற்கத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தொழில் புத்தாக்க மையங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், செயற்கை நுண்ணறிவு கல்வி, திறன்மிகு வகுப்பறை, அனைத்து தொழில் படிப்பு மாணவர்கள் கல்வி கட்டண உதவி ஆகியவை வளர்ந்து வரும் அறிவுசார் இளைய சமூகத்தின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிகுந்த ஊக்கம் அளிக்கக் கூடியது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ‘தடைகளைத் தாண்டி -வளர்ச்சியை நோக்கி’ எனும் 2024-25 நிதிநிலை அறிக்கை, தமிழ் நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கும், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: புதிய பாசனத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. மொத்தத்தில் வறட்சியான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இந்த ஆண்டாவது, மக்கள் நலன் சார்ந்த திட் டங்களைச் செயல்படுத்தும் என்று நம்பியிருந்த பொதுமக்களை, திமுக அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எரிவாயு மானியம், நியாயவிலைக் கடைகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு, மாதந்தோறும் மின்கட்டணம், பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.