“திமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மாறுபட்ட கருத்துகள் இருப்பினும்…” – கே.பாலகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

மக்களவைத் தேர்தலுக்காக திமுக கூட்டணிகள் கட்சிகள் உறுதி செய்யப்பட்டபோதும், தொகுதிகள் இன்னும் இறுதி செய்யாமல் இருக்கிறது. திமுகவில் அங்கம் வகிக்கும் முக்கியமான கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை நாம் பேட்டி கண்டிருக்கிறோம். இதில், திமுக கூட்டணியில் சிபிஎம் தொகுதி எண்ணிக்கை, தமிழக பட்ஜெட், தேர்தல் பத்திரம், தமிழகத்தில் அம்பானி முதலீடு என முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இந்த மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தனை தொகுதிகளைக் கேட்டிருக்கிறது. அதில், எத்தனை ஒதுக்க வாய்ப்பு?

“திமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. சென்றமுறை ஒதுக்கிய இரண்டு தொகுதிகளுக்கு அதிகமாக ஒதுக்கச் சொல்லி கோரிக்கை வைத்திருக்கிறோம்”.

சென்றமுறை போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

“எங்களின் மாநிலக் குழுதான் அதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு தேசிய தலைமையும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதில் நான் கருத்து சொல்ல முடியாது.”

கூட்டணி ஒருங்கிணைப்புக்காக திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் விட்டுக்கொடுத்து போவதாகத் தான் விசிக போன்ற கூட்டணி கட்சிகள் சொல்கிறது. கூட்டணிக்காக திமுக விட்டுக்கொடுக்கக் கூடாதா?

“திமுக, கூட்டணியை தலைமை தாங்குவதால் கூடுதல் இடங்களில் போட்டியிட்டு, மக்களவையில் வலுவான கட்சியாக இருக்க நினைப்பதில் தவறில்லை. மாநில அரசின் உரிமையைப் பாதுக்காக அனைத்துக் கட்சிகள் முழங்கினாலும், திமுகவின் குரல் இன்னும் வலிமையானது. எங்களின் நோக்கம் பாஜகவின் ஆட்சியை இந்தியாவிலிருந்து இறக்க வேண்டும். அதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான தீர்வை எட்டுவோம். மேலும், திமுக அதிக இடங்களில் போட்டியிட்டால் அதிமுக, பாஜகவின் வெற்றி வாய்ப்பை தமிழகத்தில் குறைக்க முடியும். அதை திமுகவின் வெற்றி எனப் பார்க்காமல் தமிழகத்தின் வெற்றியாகத்தான் நாங்கள் கருதுவோம்.”

கூட்டணிக்காக கட்சிகள் பேரம் பேசுவதாக சொன்னீர்களே? யாரை நோக்கியது அந்தக் கேள்வி?

“நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டோம். ஆனால், சில கட்சிகள் நாங்கள் திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கின்றன. ’யார் அதிகமாக ஆஃபர் செய்கிறார்களோ, அவர்களுடன் கூட்டணி உடன்பாடு செய்வோம்’ என சொல்வது அரசியல் கோட்பாடுக்கு உட்பட்டதில்லை. எந்தக் கட்சி பேரம் பேசுகிறது என்பது வெளிப்படையாக தெரிந்ததானே! (சிரிப்புடன்)”.

அதானி, அம்பானியின் நிறுவனங்களைப் பாஜகவுடன் தொடர்புபடுத்தி விமர்சனம் செய்யப்படுகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த தொழில் முதலீடு மாநாட்டில் அம்பானி ரூ.35,000 கோடி தொழில் முதலீடு செய்திருக்கிறாரே… அதில் உங்கள் கருத்து என்ன?

“சென்னையில் தொழில் முதலீடு மாநாடு நடத்தி, வெளிப்படையாக தொழில் வளர்ச்சியைப் பெற முதலீட்டை ஈர்த்திருக்கிறது தமிழக அரசு. அதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் அதானி, அம்பானிக்கும் பாஜகவுக்கும் பரஸ்பரம் உடன்பாடு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்துடன் ஒப்பந்தம் போடுவதற்கு அதானியை அழைத்துச் செல்கிறார் பிரதமர் மோடி.

இலங்கை சட்டசபையில் நிதி அமைச்சரே வெளிப்படையாக இந்திய அரசு ’எங்கள் நாட்டுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்துக்கு கொடுக்க சொல்கிறது’ எனப் பேசினார். ஒரு குறிப்பிட்ட முதலாளிக்காக மத்திய அரசே செயல்படுவது என்பது இது மக்களுக்கான அரசாக அல்லாமல் கார்ப்பரேட்டுக்கான அரசாக மாறியுள்ளது. அதனால் தான், ஹிண்டன்பர்க நிறுவனமும், அதானி நிறுவனத்தில் நடந்த விவகாரம் தொடார்பாக செபியும், மத்திய அரசு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இதனால்தான் அதானி நிறுவனத்தால் இத்தனை சொத்துகள் சேர்க்க முடிந்தது எனத் தெரிவித்தது.”

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை திமுக கையாளும் விதம் சரியா? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதிக்கே இவ்வளவு போராட்டம் அவசியம்தானா?

“அவர்கள் கோரிக்கை நியாயமானது. உச்ச நீதிமன்றமும் அதை தெளிவுப்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ரூ.5000 கோடி நிலுவைத் தொகை இருந்தது. அது திமுக ஆட்சிக்கு வந்தபின் உயர்ந்திருக்கிறது. ஆனால், எத்தனை ஆயிரம் கோடியானாலும், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை அரசு வழங்கியாக வேண்டும். உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியபின், அரசு கொடுக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரே முறையாகக் கொடுக்க வேண்டாம். படிப்படியாகக் கொடுக்கவேண்டும். ‘இவர்கள் கோரிக்கையை நிலுவையில் வைக்க மாட்டோம்’ என முதல்வர் கூறியிருக்கிறார்.

மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்குவதில்லை. பேரிடர் நிதியைக் கூட வழங்காமல் இருக்கிறது. இதனால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட சிக்கல் ஏற்படுமோ என்னும் அச்சம் ஏற்படுகிறது. எனவே, நிலுவைத் தொகையை வழங்கக் கூடாது என்பது அரசின் நோக்கமில்லை. அதை விரைவில் வழங்குவார்கள் என நம்புறோம்.”

இப்படியாக, திமுக மீது கொள்கை அளவிலும் முரண்பாடு இருக்கிறது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுடன் ஏன் தொடர நினைக்கிறது?

“கூட்டணியில் இருப்பதால் ஆளுங்கட்சி செய்வதை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் நல்ல திட்டங்களை அமல்படுத்துகிறார்கள். ஆனால், அரசு ஊழியர்கள் பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை ஆகியவற்றில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆனால், திமுக மீதான மாறுபட்ட பிரச்சினையை மையப்படுத்தி அதைப் பிரதானமாக்குவதா? அல்லது, ஒட்டுமொத்தமாக நாட்டையே கபளீகரம் செய்யும் பாஜகவை எதிர்ப்பதா?

சிஏஏ, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், கருத்து சுதந்திரம் பறிப்பு என்னும் அபாயகரமாக நடக்கும் பாசிச ஆட்சியை நாட்டில் தொடரவிடக் கூடாது. இப்போது கூட்டணியில் இணைந்திருக்கும் அனைத்துக் கட்சிக்கும் ஒரே கொள்கை இருக்காது. எனினும், ஒட்டுமொத்த தேசமே ஆபத்தில் இருக்கும்போது, கொள்கைகள் முரண்பாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு பாஜகவைத் தோற்கடிக்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.”

தேர்தல் பத்திரத்தில் பாஜக மட்டும்தான் குறிவைக்கப்படுகிறதா? எதிர்க்கட்சிகளும் வாங்கியிருப்பதாக தரவுகள் சொல்கிறதே…

“தேர்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்தியது யார் என்பதுதான் கேள்வி. ஒரு கார்ப்ப்ரேட் நிறுவனத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நன்கொடை வாங்கக் கூடாது. அப்படியே வாங்கினாலும் அதை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும். ‘வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கக் கூடாது’ என்னும் கட்டுப்பாடுகளும் இருந்தன. ஆனால், மோடி அரசு தேர்தல் பத்திரம் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்து, முன்பிருந்த தடைகள், எல்லைகளை நீர்த்துப்போக செய்துள்ளது.

எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் ஒரு நிறுவனம் கொடுக்கலாம். யார் கொடுத்தார்கள், யாருக்கு கொடுத்தார்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏன் இதை பாஜக செய்கிறது?. இதனால் பல ஆயிரம் கோடி பெற்று பாஜக லாபம் அடைந்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தான் நிறுவனங்கள் அதிகமாகக் கொடுக்கும்.

ஆனால், மற்ற கட்சிகள் வாங்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்பு மற்ற கட்சிகளும் அதைப் பின்பற்ற வேண்டிய அழுத்தம் உருவாகிவிடுகிறது. தேர்தல் பத்திரம் என்பது அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால் மற்ற கட்சிகள் அதை பின்பற்றியிருக்காது. வேறு எந்த அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரத்தை கொண்டுவரச் சொல்லி கோரிக்கை வைக்கவில்லை. இதனால் பாஜக மட்டும்தான் அதிகமாக பலனடைந்துள்ளது. இதனால், பாஜகதான் குற்றவாளி என்று கூறுகிறோம்.”

தமிழக பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து என்ன?

“தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கிறார்கள். கடன் வாங்கிதான் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கிறது. மத்திய அரசு வசூலிக்கும் வரியில் மாநிலங்களுக்கு உரிய தொகை பங்கிட்டு கொடுப்பதில்லை. செஸ், சர்சார்ஜ் என புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனால், மாநிலங்களிடமிருந்து பெரும் வரியை மாநிலத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. அது நேரடியாக மத்திய அரசுக்கே சென்றுவிடும். மாநில அரசுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வரியைக் கூட பகிர்ந்து கொடுக்க மத்திய அரசு முற்படுவதில்லை.

மேலும், மாநில அரசுகளுக்குதான் அதிகமாக செலவு இருக்கிறது. ஆனால், வருமானம் அதிகரிக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு பங்கீடுகளைக் குறைக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்குவதில்லை. இதனால், தமிழகத்துக்கு 20 ஆயிரம் கோடி நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் நிதிப் பங்கீட்டை மத்திய அரசு கடைபிடிக்கிறது. ஆனால், தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நிதி அளவு குறைகிறது.

இப்படியாக, ஒவ்வொரு தளத்திலும் மாநில அரசை மத்திய அரசு வேட்டையாடுகிறது. இதனால், மாநில அரசு தடுமாறுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை ஆதரித்த நிலையிலும் அதிமுகவுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கவில்லை. இப்போது, அவர் அதைப் பேசாமல் இருக்கிறார் என்பது வேறு கதை. ஆனால் இந்த நெருக்கடிகள் மத்தியிலும் தமிழக அரசின் பட்ஜெட் ஓரளவுக்கு ஏழை, எளிய மக்களுக்குப் பல திட்டங்களை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால், தொழிலாளர்கள் சார்ந்த கோரிக்கையைச் செவிக் கொடுத்து கேட்டிருக்க வேண்டும். பட்ஜெட்டில் சேர்த்திருக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.