பசுமை விகடன் செய்தி: அய்யம்பாளையம் தென்னைக்கு புவிசார் குறியீடு பெற நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் தி.மு.க அரசின் நான்காவது வேளாண் நிதி நிலை அறிக்கையை (TN Agri Budget 2024) வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் தென்னைக்கு புவிசார் குறியீடு (Geographical indication) பெறநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்ட தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதல்வருடன் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண் துறை செயலர் செல்வி அபூர்வா

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆத்தூர், சித்தையன்கோட்டை, சித்தரேவு, கோம்பை, நரசிங்கபுரம், பட்டிவீரன்பட்டி, கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இதில் அய்யம்பாளையம் பகுதியில் மட்டும் நாட்டுரக நெட்டை தென்னை மட்டும் 10 லட்சம் மரங்கள் உள்ளன.

இதனால் தென்னங்கன்றுகள் பதியம் போடப்பட்டு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டது. எல்லா மண்வகைக்கும் ஏற்றதாக இருப்பதால் இதற்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் பதியம் போட்டு பிறப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு கொண்டிருக்கிறது.

அய்யம்பாளையம் தென்னை

நாட்டு ரக நெட்டை தென்னை அதிக ஆயுள் மட்டுமல்லாது தொடர்ந்து காய்ப்பு இருக்கும். பராமரிப்பு செலவும் மிகவும் குறைவு என்பதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நெட்டை ரக தென்னை புவிசார் குறியீடு (Geographical indication) வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு அய்யம்பாளையம் தென்னைக்கு புவிசார் குறியீடு பெற நிதிஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தென்னைக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொண்டு வந்த விவசாயி ரசூல் முகைதீன், ”எங்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 100 முதல் 120 ஆண்டுகள் பழைமையான நெட்டை தென்னை மரங்களை வேளாண் விஞ்ஞானிகள், தென்னை வளர்ச்சி வாரிய வல்லுநர் குழு ஆய்வு செய்து அவற்றின் வயதை கண்டறிய வேண்டும். இதன்மூலம் அய்யம்பாளையம் நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு பெற வழிவகை செய்ய வேண்டும்.

ரசூல் முகைதீன்

விரைவில் அய்யம்பாளையம் தென்னைக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுத்தால், வெளிநாடுகளுக்கும் கூட தேங்காய் மற்றும் அதுசார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும். இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். எங்கள் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, நீண்ட ஆயுள்… அதிக காய்ப்பு… அய்யம்பாளையம் தென்னை திண்டுக்கல் மாவட்டத்தின் பாரம்பர்ய அடையாளம்! என்ற விரிவான கட்டுரையை பசுமை விகடன் இதழ் வெளியிட்டிருந்தது. அதற்கான பலன் இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பாக வெளிவந்துள்ளது. பசுமை விகடன் இதழுக்கு அய்யம்பாளையம் விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

பசுமை விகடன் கட்டுரை

அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி ஜோதி, ”முதலில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. பசுமை விகடன் மூலமாக எங்கள் கோரிக்கை வேளாண் விற்பனைத் துறையின் கவனத்துக்கு சென்றது. அதன் மூலம் அய்யம்பாளையம் தென்னைக்கு புவிசார் குறியீடு பெற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை விகடன் இதழுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

சக்தி ஜோதி

எங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் இந்த பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொள்முதல் செய்து, எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகிறோம். இந்த நாட்டுரக நெட்டை தென்னையில் இருந்து கிடைக்கக்கூடிய தேங்காய்களில் 65 சதவிகிதம் எண்ணெய் கிடைக்கிறது. சல்பர் உள்பட எந்த ஒரு ரசாயனமும் சேர்க்காமல்தான் கொப்பரை தயார் செய்கிறோம். ஆனாலும் பூஞ்சணம் பிடிப்பதில்லை. இது ஒரு கூடுதல் சிறப்பு என்று சொல்லலாம். இந்த தேங்காய்கள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய எண்ணெய் நல்ல சுவையாகவும் தரமாகவும் இருக்கும். இவ்வளவு சிறப்பான தென்னை ரகத்துக்கு விரைவில் புவிசார் குறியீடும் கிடைத்தும் விடும் என்று நம்புகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.