“பாஜக தகிடுதத்தங்களுக்கு எச்சரிக்கை” – முதல்வர் ஸ்டாலின் @ சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு தீர்ப்பு

சென்னை: “2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேர்மைக்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்குமான இந்த வெற்றி, இந்திய ஜனநாயகத்தின் வலுவான செய்தியை எடுத்துரைப்பதோடு, பாஜகவின் தகிடுதத்தங்களுக்கு தக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது” என்று சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 142-இன் கீழ் தனக்குள்ள அரிதினும் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், நியாயத்தை நிலைநாட்டியுள்ளதுடன் தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு செயலையும் உறுதியாக நிராகரித்துள்ளது.

2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேர்மைக்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்குமான இந்த வெற்றி, இந்திய ஜனநாயகத்தின் வலுவான செய்தியை எடுத்துரைப்பதோடு, பாஜகவின் தகிடுதத்தங்களுக்குத் தக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

பின்புலம் என்ன? – சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு, தேர்தல் அதிகாரியால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை செல்லும் வாக்குகளாகக் கருதி மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ணி, அதன் அடிப்படையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை அறிவிக்குமாறு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு இண்டியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, “8 வாக்குச்சீட்டிலும் மனுதாரருக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ளது தெரிகிறது. ஆனால், வாக்குச்சீட்டை செல்லாததாகக் கருதும் நோக்கத்துக்காக தேர்தல் அதிகாரி அனில் மசிக் தனது பேனாவால் அதில் அடையாளம் வைத்துள்ளார். இதன் மூலம் தேர்தல் அதிகாரி சட்ட விதிகளை மீறியுள்ளார். மனுதாரருக்கு ஆதரவாக போடப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி திட்டமிட்டு செயலிழக்க முயற்சித்துள்ளார் என்பது தெளிவாகிறது.

எனவே, சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிக் குற்றவாளி. அவர் மீது வழக்குப் பதிய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விரிவாக வாசிக்க > சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி – தேர்தல் அதிகாரி மீது வழக்குப் பதிய உத்தரவு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.