“ஊழல்வாதிகளை வழக்கிலிருந்து விடுவிப்பதுதான் மோடியின் கேரன்டி" என்ற உத்தவ் தாக்கரேவின் விமர்சனம்?

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“மிகச் சரியாகப் பேசியிருக்கிறார். தங்களுக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களையும், ஊழல்வாதிகளையும் எதிர்க்கட்சியினரையும் மத்திய விசாரணை அமைப்புகளைக்கொண்டு மிரட்டி, தங்கள் கட்சிக்குக் கொண்டுவருவதை ஒரு செயல் திட்டமாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க. மகாராஷ்டிராவில், ‘சரத் பவார், அஜித் பவார் இருவருமே ஊழல்வாதிகள்… அவர்கள் அரசியலின் சாபக்கேடு’ என்று பேசினார்கள் பா.ஜ.க-வினர். அஜித் பவார் பா.ஜ.க-வில் இணைந்த 48 மணி நேரத்தில் அவருக்குத் துணை முதல்வர் பதவியை வழங்கினார்கள். அதுமட்டுமல்ல, எந்தத் துறையில் அவர் ஊழல் செய்தார் என்று குற்றம்சாட்டினார்களோ அந்தத் துறையையே அஜித் பவாருக்கு ஒதுக்கினார்கள். இதேபோல, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர்கள் நாராயண் ராணே, ஜோதிராதித்யா சிந்தியா என பா.ஜ.க-வால் ஊழல் குற்றம்சாட்டப்பட்டு, மோடியின் கேரன்டியுடன் பா.ஜ.க-வில் இணைந்து புனிதர்களாக ஆனவர்களின் பட்டியல் நீளமானது. அதைத்தான் உத்தவ் தாக்கரே சொல்லியிருக்கிறார். இந்தி, இந்துராஷ்டிராவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாட்டின் இறையாண்மையைத் தவிடு பொடியாக்குவதைத் தவிர பா.ஜ.க ஆட்சியில் வேறு எதுவுமே நடக்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.’’

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

“அர்த்தமற்றுப் பேசியிருக்கிறார். உண்மையில் ‘I.N.D.I’ கூட்டணியிலிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பார்த்துச் சொல்லியிருந்தால் இந்தக் கருத்துக்கு ஓர் அர்த்தம் கிடைத்திருக்கும். அவர்தான் ஊழல் செய்தவர்களாக இருந்தாலும் தன்னுடைய அமைச்சர்களைக் காப்பாற்ற அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். `ஜெயிலுக்கே போனாலும் அமைச்சரவையிலிருந்து நீக்க மாட்டேன்’ என்று அடம்பிடித்தவரும் அவரே. ஆனால், பா.ஜ.க-வில் இணைந்தார்கள் என்பதற்காக அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு காணாமல்போனதென்று ஏதாவது ஓர் உதாரணம் சொல்ல முடியுமா… மகாராஷ்டிரா அரசியலிலிருந்து உத்தவ் தாக்கரே காணாமல் போய்க்கொண்டிருக்கிறார். அந்த வயிற்றெரிச்சலில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ஏழை, எளிய மக்களுக்கு என்ன வேண்டும், எந்தத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்துச் செய்துவருகிறது. விவசாயிகளுக்கு மானியம், முதியோருக்கு ஓய்வூதியம் என்று சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியது மோடி தலைமையிலான அரசு. ஆனால், இங்கிருக்கும் தி.மு.க அரசோ சொன்ன வாக்குறுதி எதையுமே முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. வரும் 2024-ம் ஆண்டு தி.மு.க-வை மக்கள் புறக்கணிக்கப்போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.