தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?! – அலசல்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு 2024-2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இது, ஸ்டாலின் அரசு தாக்கல் செய்திருக்கும் மூன்றாவது பட்ஜெட். இதில், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு

எப்போதுமே, மக்களுக்கு நேரடியாகப் பலன்தரக்கூடிய திட்டங்களால்தான், தேர்தலில் தாக்கம் ஏற்படும் என்கிற வாதம் உண்டு. அந்த வகையில், வீடற்றவர்களுக்கான கலைஞர் கனவு இல்லம் திட்டம், தி.மு.க அரசுக்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். ரூ.3,500 கோடி செலவிலான இந்தத் திட்டத்தின் கீழ் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கட்டணமில்லா பேருந்துப் பயணம் திட்டம் பெண்கள் மத்தியில் ஸ்டாலின் அரசுக்கு செல்வாக்கை அதிகரித்ததைப்போன்ற திட்டமாக, மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு உடனடியாக பலனளிக்கும் திட்டமாக இது இருப்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கான ஆதரவை அதிகரிப்பதில் இந்தத் திட்டம் உதவும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஸ்டாலின்

இந்த வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதுடன், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

“இந்த பட்ஜெட் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?” என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் முன்வைத்தோம். “மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை, வெள்ள பாதிப்புகள் என கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருக்கிறது. தாயுமானவர் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் போன்ற சில புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உள்கட்டமைப்பு, குடிநீர், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் நிறைய இடம்பெற்றிருக்கின்றன.

ப்ரியன்

தொலைநோக்கு அடிப்படையிலான பல நல்ல திட்டங்கள் பட்ஜெட்டில் இருக்கின்றன. அதே நேரம், இந்த பட்ஜெட், தேர்தலை மனதில் வைத்து போடப்படவில்லை என்பது என் கருத்து. தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் போடப்பட்டிருந்தால், சமையல் எரிவாயு மானியம் கொடுத்திருப்பார்கள். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்று அறிவித்திருந்தால், அது மக்களுக்கு உடனடியாக பலன் அளிக்கும் திட்டமாக இருந்திருக்கும்.

மாதா மாதம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அதை அறிவித்திருந்தால், உடனடியாக மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, பெட்ரோல் விலையைக் குறைத்துவிட்டார்கள். ஆனால், டீசல் விலையைக் குறைக்கவில்லை. அதைக் குறைத்திருந்தால், மக்கள் மத்தியில் அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் போட்டு இருந்தால் இதுபோன்ற அறிவிப்புகளை தி.மு.க அரசு செய்திருக்கலாம் என்பது என் கருத்து.

தலைமைச் செயலகம்

சில திட்டங்களுக்கான நிதியைக் குறைத்துவிட்டு, மக்களுக்கு உடனடியாக பலன் தருகிற திட்டங்களை அறிவித்திருக்கலாம். குறிப்பாக, வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1000 கோடி அறிவித்திருக்கிறார்கள். அதற்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கிவிட்டு, அடுத்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கலாமே. இப்படியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால், அது மக்களுக்கு உடனடியாக பலன்களை அளித்து, தேர்தலில் தி.மு.க-வுக்கான ஆதரவை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கும்” என்கிறார் ப்ரியன்.

இந்த பட்ஜெட் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறக்கூடிய பட்ஜெட்டாக இருக்கிறது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கே.கனகராஜ். “அனைத்துத் தரப்பினருக்கும், அனைத்துப் பகுதியினருக்கும் பலனளிக்கக்கூடிய நிறைய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கின்றன. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த அனைவருக்கும் பலன்தரக்கூடிய பல திட்டங்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் குடிசை வீடுகளை அடையாளம் கண்டு, அவற்றை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்னென்ன இருக்கின்றன என்று பார்த்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

கனகராஜ்

அந்த குடும்பத்தைச் சேர்ந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. மதிய உணவும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அந்த மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து, போட்டித்தேர்வுக்கு தயாரானால், பயிற்சி கட்டணத்தை அரசு வழங்குகிறது. வேலைவாய்ப்புக்கான பல ஏற்பாடுகளையும் அரசு செய்கிறது. எனவே, அனைத்துத் திட்டங்களாலும் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். அந்த வகையில், இந்த பட்ஜெட் வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் கனகராஜ்.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட். கடந்த 2 ஆண்டுகளில் அரசின் கடன் பெருமளவில் உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை. அதனால், இந்த பட்ஜெட் அறிவிப்புகள் எல்லாம் தேர்தலுக்கு பயன்படாது என்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?, ஆம், எனில் எந்த அறிவிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.