“இண்டியா கூட்டணிக்குள் சலசலப்பால் பின்னடைவுதான். ஆனால்…” – கே.பாலகிருஷ்ணன் நேர்காணல்

திமுகவில் கூட்டணியில் இருப்பதால் மட்டுமே வேங்கைவயல் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் மவுனம் காக்குகிறதா? அதிமுக – பாஜக மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? பாஜகவை விமர்சிக்க தயங்குகிறதா அதிமுக தலைமை? இண்டியா கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா? ராமர் கோயிலால் பாஜகவுக்கு வடமாநிலத்தில் ஆதரவு அதிகரிக்குமா? – இவ்வாறாக முன்வைத்த அனைத்து கேள்விகளுக்கு வெளிப்படையாகப் பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். அவரது நேர்காணலின் இரண்டாம் பகுதி இங்கே…

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஎம் அமைதி காக்குகிறதா? கூட்டணியில் இருப்பதால் மட்டுமே விமர்சிக்கக் கூடாது என தீர்மானத்தில் இருக்கிறார்களா?

“வேங்கைவயல் விவகாரம், மேல்பாதி, ஸ்ரீமதி மரணம் என அனைத்து விவகாரங்களிலும் முதலில் குரல் கொடுத்தது சிபிஎம். வேங்கைவயல் சம்பவம் நடந்தவுடனே, எங்கள் கட்சி எம்எல்ஏ தான் முதலில் அந்த இடத்துக்குச் சென்றார். நாங்கள் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். ஆனால், தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே. காலதாமதம் குறித்து நீதிமன்றத்திடம் கேள்விக் கேட்க முடியாது. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில், போராட்டம் பேரணி நடத்துவதில் எந்தப் பயனுமில்லை. இதில், நீதிமன்றம் தலையிட்ட பின்பு அரசைக் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.

முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்வதற்கு எந்த தயக்கமும் எங்களிடம் இல்லை. இந்தக் கூட்டணி என்பது பாஜகவை எதிர்க்கும் கூட்டணியே தவிர, ‘மக்கள் பிரச்சினைகள் பற்றி கேள்வி கேட்கக் கூடாது’ என்னும் நிபந்தனைகள் இல்லை. அரசும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்கள். வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு குற்றவாளியாக்குவதை சிபிசிஐடி தலைமையிடமும் பேசியிருக்கிறோம். ஆனால், ’அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படையில்தான் விசாரணை மேற்கொள்கிறோம்’ என்றனர். பட்டியலின மக்களைக் குறிவைத்து இவர்கள்தான் குற்றவாளி என்று சொன்னால், அதில் நாம் கேள்வி கேட்கலாம். ஆனால், முறையான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.”

பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. அதனால்தான் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து?

“பாஜகவில் இணைந்தவர்கள் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் 70 வயது கடந்தவர்கள். இப்போது, அவர்கள் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் பரிசு கொடுக்க பாஜக அழைத்து அவர்களை கட்சியில் சேர்த்துள்ளது. இது கட்சி வளர்ச்சிக்கு அடையாளமாகாது. ’கட்சி வளர்ச்சி’ என்பது சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் இணைவதுதான். சிலர் அரசியலைப் பயன்படுத்தி பலன் பெறலாமா என்றும், வேறு கட்சிகளில் பொறுப்பு கிடைக்கவில்லை என்னும் வருத்தத்தில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

தமிழகம் அடிப்படையாகவே பாஜகவின் கருத்தாக்கத்தை ஏற்காத மாநிலம். இங்கு இறை நம்பிக்கை, இறை உணர்வு, இறைவழிபாடு இருக்கிறது. ஆனால், இறை நம்பிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்திய வரலாறு தமிழகத்தில் இல்லை. அதைப்போல இந்து மதத்தை சார்ந்தவர்கள் இஸ்லாமிய மக்களுடன் சகோதரத்துவத்துடன் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மத்தியில் மதவெறி மத மோதல்களைக் கொண்டுவர முயற்சி செய்யும் பாஜகவின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. அதனால், தமிழகத்தில் பாஜக வளர முடியாது.”

அதிமுக மீண்டும் பாஜகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா?

“அதிமுகவின் பிரதான தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரைப் பாஜக விமர்சித்தப் பின், அதிமுக பாஜகவில் இணைய வாய்ப்பில்லை. எனினும், பாஜக – அதிமுக இடையே அரசியல் ஊசலாட்டம் இருக்கிறது. பாஜக கொண்டு வந்த அபாயகரமான திட்டங்களைக் கூட்டணி தர்மத்துக்காக, முன்பு ஆதரித்தோம் என சொல்வதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.”

ஆனால், பாஜகவை நேரடியாக விமர்சனம் செய்ய அதிமுக தலைமை தயங்குகிறதே!

“பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பின், விமர்சித்தால் எதிர்க்கட்சிகள் வீட்டுக்கு செல்லும் ஈடி, ஐடி ரெய்டுகள் தங்கள் பக்கம் திரும்பி விடுமோ என்னும் அச்சம் அதிமுகவினரிடம் இருக்கிறது. எனவே, அவர்கள் மீண்டும் இணையவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி இணைந்தால் அதிமுக ‘அரசியல் கட்சி’ என்னும் தகுதியை இழந்துவிடும்.”

ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்துகொள்ளும் விதம் பற்றி உங்கள் கருத்து என்ன?

“சட்டப்படி ஒரு மாநில அரசு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும். விருப்பு, வெறுப்புகளைக் கடந்து சட்டப்படி சட்டப்பேரவைக்கு மாநில அரசால் அழைத்துவரப்படுகிறார். ஆனால், ஆளுநர் சட்ட விதிகளை மதிக்காமல் செயல்படுகிறார். அவர் பேசிய வார்த்தைகள் எதுவுமே சட்ட வரம்புக்கு உட்பட்டதல்ல. அமைச்சரவை ஒப்புதல் தரும் உரையை வாசிப்பது ஆளுநர் வேலை. அது சரியா, தப்பா என்னும் ஆராய்ச்சியில் இறங்குவது ஆளுநரின் வேலையில்லை. பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைப் பகடையாகப் பயன்படுத்தி போட்டி அரசியல் பாஜக கையிலெடுக்கிறது.”

காங்கிரஸ் மத்தியில் இருக்கும்போது ஆளுநர்களை வைத்து நெருக்கடி கொடுக்கவில்லையா?

“காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் ஆளுநர்களைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், போட்டி அரசியலைக் காங்கிரஸ் கையிலெடுக்கவில்லை. 1967-ம் ஆண்டுக்குப் பிறகு மாநிலக் கட்சிகள் உருவாக்கி ஆட்சியைப் பிடித்தனர். அப்போது, காங்கிரஸுக்குப் பிடிக்காத அரசுகளைக் கலைத்தனர். ஆனால் ஆளுநரை சட்ட வரம்புக்கு மீறி, ‘உரையைப் படிக்க மாட்டேன், மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன்’ என சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறையை காங்கிரஸ் கடைப்பிடிக்கவில்லை.”

இண்டியா கூட்டணியில் இருந்து அடுத்தடுத்த கட்சிகள் வெளியேறுகிறது. இண்டியா கூட்டணியிடம் ஏன் ஒருங்கிணைப்பு இல்லை?

“தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பது போல் மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகள் இண்டியா கூட்டணி இல்லை. பல கட்சிகள் மாநிலங்களில் வலுவான கட்சிகளாக இருக்கின்றன. டெல்லியில் ஆம் அத்மி, தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணமூல், கேரளத்தில் சிபிஎம் என மாநிலத்தில் வலுவான கட்சியாக இருக்கின்றனர். இந்தக் கட்சிகள் இணைந்து பாஜகவை வீழ்த்த கூட்டணி உருவாக்கினாலும் தொகுதிப் பங்கேட்டில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால், முரண்பாடு எழுகிறது. ஆனால், கூட்டணிக்குள்ளேயே பரஸ்பரம் போட்டிகள் எழுந்து பாஜகவை வீழ்த்த முடியாமல் போகும் சிக்கல் ஏற்படலாம்.

விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு போராட்டம் என மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வலுவான போராட்டத்தை இண்டியா கூட்டணி முன்னெடுக்க வேண்டும். மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக மக்களைப் போராட்டக் களத்தில் கொண்டுவர வேண்டிய பொறுப்பு இண்டியா கூட்டணிக்கு இருக்கிறது. அப்போதுதான் பாஜகவுக்கு எதிரான குரலை உயர்த்த முடியும். ஆனால், இண்டியா கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.”

இதனால், இண்டியா கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கை சிதைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதோ என்னும் கேள்வி எழுகிறது?

“பாஜக எதிராக யார் களத்தில் நின்றாலும் அவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது என் கருத்து. கடந்த ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம்தான். மற்ற கட்சிகள் காங்கிரஸோடு இணையாமல் தனித்து நின்றதால் இந்த வெற்றி பாஜகவுக்கு சாத்தியமானது. அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் நிச்சயமாகப் பாஜகவுக்கு எதிரான கூட்டணி ஆட்சி உருவாகி இருக்கும். அந்த மனநிலையை உள்வாங்கிக் கொண்டு காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் விட்டுக் கொடுத்து தொகுதிகளைப் பங்கிட்டு இணைவதுதான் சரியானது. மாநிலக் கட்சிகளும் அதிக இடங்களில் போட்டியிட நினைத்தால் ஒற்றுமை இருக்காது.”

தேர்தலுக்குப் பின் இந்தக் கூட்டணியில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?

“இந்தியா கூட்டணியில் முரண்பாடு இருந்தாலும், முதன்முறையாக இந்தியாவில் தேர்தலுக்கு முன்பு அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி உருவாகி இருப்பது நல்ல செய்தி. தேர்தலுக்கு முன்பு இண்டியா கூட்டணியில் தலைவர்களும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். எனவே, தேர்தலுக்குப் பின்பு இண்டியா கூட்டணியில் கண்டிப்பாக ஒருங்கிணைப்பு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.”

உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதைக் கொண்டாட பிரதமர் சொல்கிறார் . இதில் என்ன தவறு?

“கோயில் நிர்வாகம்தான் கோவிலைக் கட்ட வேண்டும். இதில் எதற்காகப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, திறந்து வைக்க வேண்டும். ’சோம்நாத் கோயில் கட்டி திறக்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் நேரு அதன் திறப்பு விழாவுக்குச் செல்ல மாட்டேன்’ என்று கூறினார். ஏனென்றால், ’ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமராக இருக்கும் நிலையில், ஒரு மதத்துக்கு ஆதரவாகக் கோயிலுக்கு செல்ல மாட்டேன்’ என்று கூறினார். ‘இந்தியா’ என்னும் மதசார்பற்ற நாட்டின் பிரதமராக இருந்து கொண்டு, பிரதமர் மோடி பூசாரி வேலையைப் பார்ப்பது சரியல்ல.

பிரதமர் மோடிக்கு ராமர் மீது எந்தப் பக்தியும் இல்லை. ராமர் பெயரைத் தேர்தலுக்குப் பயன்படுத்த வேண்டும். அந்த நோக்கத்தில்தான் அவசர அவசரமாக கட்டிமுடிக்காத ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. ’ராமர் கோயில் வேண்டாம்’ என நாங்கள் சொல்லவில்லை. ராமர் மீது மக்களுக்குப் பக்தி இருக்கிறது, வழிபாட்டு உரிமை இருக்கிறது. மகாத்மா காந்தியும் இறுதி வரை மதம் என்பது என் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அரசு என்பது ஒரு மதசார்பற்றது. நான் ஒரு சனாதன இந்துவாக இருக்கலாம் . ஆனால், அரசு மதசார்பற்ற அரசாங்கமாக இருக்க வேண்டும் என்றார். அதனால், ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பை சிபிஎம் எதிர்த்தது. பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ’ராமர் கோயில் வழிபாட்டுக்கு நாங்கள் எதிரியில்லை. அதில் அரசியல் புகுத்தியிருப்பதை எதிர்க்கிறோம்’ என விளக்கினார்.”

ராமர் கோயில் எதற்காக திறந்தார்களோ, அதை நோக்கி அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்? வட இந்தியாவில் இந்தத் திறப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறதே!

“பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. வட இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களிக்கிறார்கள். எனவே, ’வட இந்தியாவில் மக்கள் அனைவரும் பாஜக பின் நிற்கிறார்கள்’ என்பதில் உண்மையில்லை. அதற்குத்தான் ராஜஸ்தான் தேர்தலைக் குறிப்பிட்டேன். 50% வாக்குகள்தான் பாஜகவுக்கு கிடைத்தது எனில், மீதமுள்ள 50% மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தானே இருக்கிறார்கள். ராமர் கோயிலைத் திறந்த ஒரே காரணத்துக்காகப் பாஜகவை அனைத்து வடமாநில மக்களும் ஆதரிப்பதாக சொல்வதில் உண்மையில்லை.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.