ஸ்டாலின் ‘அழைப்பு’ முதல் ‘மோடியின் மேற்கோள்’ வரை – கடைசி நாள் ஹைலைட்ஸ் @ பேரவை கூட்டத் தொடர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் திறப்புக்கு எதிர்க்கட்சியை அழைத்த முதல்வர் ஸ்டாலின், நெகிழ்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பின், காவிரி விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்பு செய்த அதிமுக என நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதிநாளில் சட்டப்பேரவையில் நடந்தது என்ன? – ஒரு விரைவுப் பார்வை…

கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. மேலும், மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் தமிழக அரசு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை முறையே கடந்த 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்தது. இரண்டு பட்ஜெட் குறித்த விவாதங்கள் இரண்டு நாட்களாக நடைப்பெற்றது. இந்த நிலையில், புதன்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக நடந்த நிகழ்வுகள்.

முதல்வர் ஸ்டாலின் அழைப்பு: ‘சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் வரும் 26-ம் தேதி திறக்கப்படவுள்ளது’ என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அப்போது பேசியவர், “இதற்காக அழைப்பிதழ் எதுவும் அச்சிடவில்லை. அதனால், இங்கு இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். | விரிவாக வாசிக்க > பிப்.26-ல் கலைஞர் நினைவிடம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு @ சட்டப்பேரவை

‘எய்ம்ஸ் போல் இருக்காது!’ அதேபோல், இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பட்ஜெட் விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ”கோவையில் நூலகம் அமைக்கவிருப்பதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதை எங்கே, எப்போது கட்டி முடிப்பீர்கள் எனக் கேள்வியை முன்வைத்தார். வரும் 2026-ம் ஆண்டு ஜனவரில் திறக்கப்படும். நிச்சயமாக உங்களுக்கு அழைப்பு விடுக்கங்கப்படும். மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதாக சொன்னார்களே… (அவையில் சிரிப்பொலி) அதுபோல் அல்லாமல், குறிப்பிட்ட காலத்தில் நிச்சயமாக நூலகம் கட்டி முடிக்கப்பட்டும்” என்று மத்திய பாஜக அரசை பகடி செய்தார். | விரிவாக வாசிக்க > “மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல்…” – பேரவையில் பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் @ கோவை நூலகம்

’மேகேதாட்டு அணை’ – அதிமுக வெளிநடப்பு: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இது தொடர்பாக, கம்யூனிஸ்ட், பாமக, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களும் பேசியிருந்தனர். மேலும், காவிரி ஆணையம் தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்’ என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். | வாசிக்க > “திமுக தூங்கிக் கொண்டிருக்கிறது” – மேகேதாட்டு விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்

இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் ஒரு செங்கலைக் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது” எனப் பேசினார். | வாசிக்க > மேகேதாட்டு | தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கர்நாடகம் வைக்க முடியாது – அமைச்சர் துரைமுருகன்

‘சாதிவாரி கணக்கெடுப்பு’ – பாமக வெளிநடப்பு: சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பேச கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு, “சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அதைப் பட்ஜெட்டிலும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது” என்னும் கருத்துக்களை முன்வைத்து பாமகவுக்குப் பேச அனுமதி மறுத்தார். இந்த நிலையில், அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பாமகவினர் வெளிநடப்பு செய்தனர். அதேவேளையில், “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அதன் விவரம் > “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” – முதல்வர் @ தமிழக சட்டப்பேரவை

மோடியை மேற்கோள் காட்டிய தங்கம் தென்னரசு: தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது பதிலுரை ஆற்றிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “எங்கள் மாநிலம் 60,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தருகிறது. அனால் எங்களுக்கு திரும்பிக் கிடைப்பது என்ன? எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா? – இவ்வாறு மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. 2012-ஆம் ஆண்டில் குஜாரத் மாநில முதல்வர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான். குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழகத்தில் இருந்து நாங்கள் கேட்கிறோம். மத்திய அரசு தனது வரிகள் மீது செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இந்தத் தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். | வாசிக்க > “குஜராத்தில் அன்று மோடி கேட்டதை இன்று நாங்கள் கேட்கிறோம்!” – அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம் @ பேரவை

கடன் சர்ச்சை: “10 ஆண்டு காலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நாங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளதாக அதிமுக கூறுவது தவறு. நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார். விரிவாக வாசிக்க > அதிமுக Vs திமுக ஆட்சியில் மாநிலக் கடன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை

மின் துறையில் சீர்திருத்தம் ஏன்? – “மத்திய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, மத்திய அரசு வகுத்துள்ள கணக்கீட்டுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும். இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம்” என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அதன் விவரம் > மின் துறையில் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை

அதேபோல், “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கு 7 லட்சம்” என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார். தமிழக பாஜகவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு விளக்கம் அளித்தார். | விரிவாக வாசிக்க > மத்திய அரசின் திட்டத்தை ‘பெயர் மாற்றி’ அறிவித்ததா தமிழக அரசு? – தங்கம் தென்னரசு மறுப்பு @ பேரவை

பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்பதைக் கூறி ’அம்மஞ்சல்லி’ தரவில்லை என விமர்சித்தார். இறுதியாக, முதல்வர் உரையுடன் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.