“அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்” – இபிஎஸ் குற்றச்சாட்டு

நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே, ரூ. 10 லட்சம் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில். பழனிசாமி பேசியது: இங்குள்ள எம்ஜிஆர் சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். நான் ஜெயலலிதா சிலையை திறந்து வைத்துள்ளேன். இந்த மைதானமே நிரம்பி வழிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்களவைத் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கு இங்கு உள்ள கூட்டமே அத்தாட்சி. நெய்வேலி வரை மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்துள்ளேன். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம் மக்கள் தான் எஜமானர்கள்.

மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அதிமுக. இந்த இயக்கத்தை உடைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். அதிமுகவை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ அதுபோல் அதிமுகவுக்கு தடை போட முடியாது.

ஸ்டாலின் எத்தனை வழக்கு போட்டாலும், நீதிமன்றத்தில் சந்தித்து வழக்குகளை எல்லாம் வெற்றி காண்போம். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தோம் விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் கொடுத்தோம். தற்போது டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

திரிணமூல் ஆதரவு: மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது திரிணமூல் காங்கிரஸ். அதற்கான கடிதத்தை, கட்சியின் தமிழக தலைவர் கலைவாணன் நேற்று முன்தினம், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து வழங்கினார். கலைவாணன் கூறும்போது, “இந்த முடிவை விரைவில் மம்தா பானர்ஜிக்கு தெரிவிப்போம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.