தெலங்கானா எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் மரணம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, இன்று (பிப்.23) அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 37.

சங்காரெட்டி மாவட்டத்தின் சுல்தான்பூர் ரிங் ரோடு பகுதியில் சாலைத் தடுப்பில் கார் மோதி விபத்து நடந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட எம்எல்ஏ அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். இதனையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து சங்காரெட்டி காவல் கண்காணிப்பாளர் ரூபேஷ் கூறுகையில், “லாஸ்யா நந்திதா பசாராவில் இருந்து கட்சிபவுலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். ஓட்டுநர் தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், காரின் முகப்புப் பகுதிக்கு மட்டுமே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் எம்எல்ஏவின் தனிச் செயலரும் காயமடைந்துள்ளார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றார்.

இளம் எம்எல்ஏ: 1986ல் பிறந்த லாஸ்யா நந்திதா 10 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்தார். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் செகுந்தராபாத் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நந்திதாவின் தந்தை ஜி.சயானா செகுந்தராபாத் கன்டோன்மன்ட் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். அவர் 2023 தொடக்கத்தில் மறைய லாஸ்யாவுக்கு சீட் வழங்கப்பட்டது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

சந்திரசேகர ராவ் இரங்கல்: லாஸ்யாவின் மறைவுக்கு பிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்துவாடும் குடும்பத்துக்கு கட்சி அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிஆர்எஸ் கட்சியின் முக்கியத் தலைவரான கேடி ராமாராவ் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் குறிப்பில், “லாஸ்யாவின் மறைவு குறித்து துக்கச் செய்தி தற்போதுதான் கிடைக்கப் பெற்றேன். ஓர் இளம் தலைவரை இழந்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.