“வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரிக்கும்” – அண்ணாமலை உறுதி

கோவை: வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு 33 சதவீதமாக அதிகரிக்கும் என, மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் நேற்று மாலை கோவை பாப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் தொடங்கி சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் நிறைவடைந்தது.

தொடர்ந்து அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது போன்ற அவல நிலையை காண முடியாது. என்னை லேகியம் விற்பவர் என அதிமுகவினர் விமர்சித்துள்ளனர். பிப்ரவரி 27ம் தேதி பொங்கலூரில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் குடும்ப ஆட்சி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அந்த லேகியம் அமையும்.

நதிகள் புனரமைப்பு உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து அமல்படுத்தி வரும் திட்டங்கள் தான். தமிழகத்தில் பாஜக 20 சதவீத வாக்கு சதவீதத்தை தாண்டி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. எதிர்வரும் தேர்தலில் 33 சதவீதமாக அதிகரிக்கும். எனவே, தமிழகத்தில் பாஜக ஏற்கெனவே வளர்ந்து விட்டது.

கோவையில் தேசிய புலனாய்வு முகமை காவல் நிலையம் அமைக்க வேண்டும். கோவை போன்ற ஒரு நகரத்தில் சர்வதேச விமான போக்கு வரத்து அதிகரிக்காதது, விரிவாக்க திட்டம் செயல்படுத்தாமல் உள்ளது உள்ளிட்டவை வெட்கக்கேடானது. இதற்கு திமுக அரசே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ., மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், பேராசிரியர் கனக சபாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.