இந்திய அணியில் கலக்கும் அண்ணன்… ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்த தம்பி – யாரு தெரியுமா?

Musheer Khan Double Century: 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் (Ranji Trophy 2024) கடந்த ஜன.5ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. குறிப்பாக, நான்கு எலைட் பிரிவுகளாக தலா 8 அணிகள் பிரிக்கப்பட்டன. பிளேட் பிரிவில் 6 அணிகள் இடம்பிடிப்பார்கள், அவை தனிக்கதை. 

எலைட் பிரிவில் உள்ள அணி தங்கள் பிரிவுகளுக்குள் உள்ள பிற 7 அணிகளுடன் தலா 1 போட்டியில் விளையாடின. இதில், லீக் சுற்று போட்டிகள் நிறைவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன. 

அந்த வகையில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், விதர்பா, சௌராஷ்டிரா, பரோடா, மும்பை உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன. காலிறுதிப் போட்டிகள் நேற்று முதல் பல்வேறு நகரங்களில் தொடங்கின.  இதில், நடப்பு சாம்பியன் சௌராஷ்டிரா அணி தமிழ்நாடு அணியுடன் (Tamil Nadu vs Sourastra) கோவை எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் விளையாடி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கர்நாடகா – விதர்பா,  மத்திய பிரதேசம் – ஆந்திரா, மும்பை – பரோடா உள்ளிட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. 

முஷீர் கானின் சாதனை சதம்

மும்பை பிகேசி மைதானத்தில் நடைபெற்று வரும் மும்பை – பரோடா போட்டியில் 18 வயதே ஆன முஷீர் கான், முதல் தர போட்டிகளில் தனது முதல் சதம் மட்டுமின்றி இரட்டை சதத்தையும் பதிவு செய்தார். முஷீர் கானின் இந்த இரட்டை சதம் மும்பை அணியை வலுவான இடத்திற்கு எடுத்துச்சென்றது எனலாம். அவர் தான் சந்தித்த 350ஆவது பந்தில் 18 பவுண்டரிகளுடன் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். குறிப்பாக, மும்பை அணி 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, முஷீர் கான் (Musheer Khan) ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடி மிரட்டினார். 

மும்பை அணி 384 ரன்களுக்கு இன்று ஆல்-அவுட்டானது. இருப்பினும், முஷீர் கான் 203 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். பரோடா அணியின் பந்துவீச்சில் பார்கவ் பட் 112 ரன்களை மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது பரோடா அணி பேட்டிங் செய்து வருகிறது. லீக் போட்டிகள் நான்கு நாள்கள் நடைபெறும், இதுபோன்ற நாக்அவுட் சுற்று போட்டிகள் 5 நாள்கள் வரை நடைபெறும். 

18 ஆண்டுகள் 362 நாள்களில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், பாம்பே/மும்பை அணியில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த பேட்டர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 18 ஆண்டுகள் 262 நாள்களான வாசிம் ஜாபர் 1996-97 சீசனில் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசியதுதான் தற்போதும் சாதனையாக உள்ளது. 

முஷீர் கான்: யார் இவர்?

முஷீர் கான், சர்ஃபராஸ் கானின் (Sarfaraz Khan) இளைய சகோதரர் ஆவார். இவர் சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடி, தொடரின் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்தார். அவர் அந்த தொடரில் 2 சதங்கள், 1 அரைசதம் உடன் 360 ரன்களை குவித்தார். 

– Unbeaten 203 runs from 357 balls when Mumbai all-out for 384 runs in the Quarter Final. This is unreal by Musheer Khan. pic.twitter.com/LXkHGSF3Ya

— Johns. (@CricCrazyJohns) February 24, 2024

கடந்த 2023ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் ரஞ்சி டிராபியில் அறிமுகமான முஷீர் கான், இதற்கு முன் மூன்று போட்டிகளில் (5 இன்னிங்ஸ்) மொத்தம் 96 ரன்களையே எடுத்திருந்தார். அதில் அதிகபட்சமாக 42 ரன்களை அவர் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய சீனியர் அணியில் சர்ஃபராஸ் கான் தற்போது புயலை கிளப்பி வரும் நிலையில், சர்ஃபராஸ் கானின் தம்பி இரட்டை சதம் அடித்து மிரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.