பாஜகவில் இணைந்தார் விஜயதரணி: பிரதமர் மோடியின் தலைமை ஈர்த்ததாக விளக்கம்

புதுடெல்லி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைகிறார் எனப் பேசப்பட்ட நிலையில், அவர் இன்று டெல்லியில் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏ, 3 முறை சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த விஜயதரணி, கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே விஜயதரணி பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வந்தன. இந்தச் சூழலில் அவர் இன்று பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.

செல்வப்பெருந்தகை ரியாக்‌ஷன்: விஜயதரணி பாஜகவுக்கு சென்றது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்தப் பேட்டியில், “விஜயதரணிக்கு கட்சி 3 முறை வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அவர் கட்சி மாறியிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க” என்று கருத்து தெரிவித்தார்.

அண்ணாமலை வரவேற்பு: “காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவின் இணைந்துள்ளார். அவரை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அதிருப்தி ஏன்? – கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி கொண்டது. தற்போது காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியை காங்கிரஸ் தக்க வைக்குமா அல்லது பாஜக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்த்துக்கே சீட் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், பாஜகவில் இணைய முடிவு செய்ததாகவும், அவர் குமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, “பாஜகவில் இணைகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு ஆமாம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. இவர் கட்சியிலிருந்து விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த பாதிப்பு இல்லை” என்றது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.