WPL 2024: `சினிமா க்ளைமாக்ஸ் வைப்!' கடைசி பந்தில் சிக்சர் அடித்த `கனா' வீராங்கனை! – என்ன நடந்தது?

வுமனஸ் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியே பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. மும்பையும் டெல்லியும் மோதிய இந்தப் போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் 5 ரன்கள் தேவையென்ற நிலையில் சிக்சர் அடித்து வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. மும்பை சார்பில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற செய்தவர் சஜானா. கேரளாவைச் சேர்ந்த இவர் ‘கனா’ திரைப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பெங்களூருவில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20 ஓவர்களில் அந்த அணி 171 ரன்களைச் சேர்த்திருந்தது. டெல்லியின் சார்பில் அலிஸ் கேப்ஸி 75 ரன்களை எடுத்திருந்தார். இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 பந்துகளில் 42 ரன்களை அடித்திருந்தார். 175+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக ஆடியதன் விளைவாக டெல்லி அணி சவாலான ஸ்கோரை எட்டியது. டார்கெட்டை சேஸ் செய்த மும்பை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் விட்டு ரன்னையும் சேர்த்துக் கொண்டே இருந்தது. யஸ்திகா பாட்டியாவும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் அரைசதம் அடித்து அணியை இலக்கை நோக்கி வேகமாக நகர்த்தினர். ஆனாலும் ட்விஸ்ட் காத்திருந்தது.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் அலிஸ் கேப்சி வீசிய அந்த ஓவரில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் அவுட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் மும்பையின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை. அப்போதுதான் உள்ளே வந்து முதல் பந்தில் ஸ்ட்ரைக் எடுக்கும் சஜானா க்ரீஸில் நிற்கிறார். இத்தனைக்கும் சஜானாவுக்கு வுமன்ஸ் ப்ரீமியர் லீகிலேயே இதுதான் முதல் போட்டி. மும்பை அணியின் கூடாரம் பதைபதைப்பின் உச்சத்துக்குச் சென்றது. ஆனால், சஜானா செம கூலாக அந்தப் பந்தை இறங்கி வந்து விளாசி சிக்சராக்கினார். மும்பை திரில் வெற்றி பெற்றது.

சஜானா கேரளாவைச் சேர்ந்த வீராங்கனை. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான ‘கனா’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஆடும் சக கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இவர்களின் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருந்தார்.

திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் போன்றே ஒரு திரில்லான ஃபினிஷை போட்டியில் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார் சஜானா. எதிரணியில் ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸே சஜானாவை பயங்கரமாகப் பாராட்டியிருக்கிறார்.

“போட்டியின் முடிவு எங்களுக்குச் சாதகமாக இல்லை. ஆனாலும் அறிமுக வீராங்கனை சஜானா அபாரமாக ஆடினார். எளிய பின்னணியை கொண்டு கேரளாவின் வெள்ள பாதிப்பில் அனைத்தையும் இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படிச் சாதித்திருக்கிறார். அவருடைய பின்னணியும் அவருடைய திறமையும் ஆச்சர்யமளிக்கிறது” என ஜெமிமா கூறியிருந்தார்.

Sajana

ஆட்டத்தில் சிறப்பாக ஆடியதற்கான விருதை ஹர்மன்ப்ரீத் வென்றிருந்தார். “சஜானா அடித்த சிக்சரால்தான் நான் இங்கே நிற்கிறேன். பயிற்சியின் போதே அவர் பெரிய சிக்சர்களை அடித்து அசத்தியிருந்தார்” என ஹர்மன்ப்ரீத்தும் தன் பங்குக்குப் புகழாரம் சூட்டியிருந்தார்.

`ஐபிஎல் அளவுக்கு WPL சுவாரஸ்யமாக இருக்காது’ என்று விமர்சித்தவர்களுக்கு முதல் மேட்சிலேயே திரில் அனுபவம் கொடுத்து அசத்தியிருக்கிறது பெண்கள் படை!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.