மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்காக கேரளாவில் உருவாக்கப்பட்ட குணா குகை

கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி கொடைக்கானலில் உள்ள ஒரு குகைப்பகுதியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அந்த குகைக்கு குணா குகை என்றே பெயர் நிலைத்து விட்டது. கொடைக்கானலில் அதுவும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறிவிட்டது. அதன்பிறகு சில படங்களின் படப்பிடிப்புகளும் அங்கே நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படத்தில் இந்த குணா குகை முக்கால்வாசி படத்திற்கு மேல் இடம் பெற்றுள்ளது.

கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும்போது தடையை மீறி இந்த குணா குகையை பார்க்கச் செல்லும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் அங்கு இருந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்து விட, உடன் வந்த நண்பர்கள் எப்படி போராடி அவரை மீட்கிறார்கள் என்பது தான் இந்தப்படத்தின் கதை. இந்த படத்தில் நண்பன் குகைக்குள் விழும் காட்சிகளும் அவரை மீட்பதற்காக இன்னொரு நண்பன் குகைக்குள் இறங்கி போராடும் காட்சிகளும் படு திரில்லிங்காக படமாக்கப்பட்டிருந்தன. இந்த காட்சிகள் அனைத்துமே கேரளாவில் உள்ள பெரும்பாவூர் என்கிற பகுதியில் உள்ள ஒரு குடோனில் செட் போடப்பட்டு தான் படமாக்கப்பட்டது என்கிற ஆச்சர்ய தகவலை தெரிவித்துள்ளார் படத்தின் கலை இயக்குனர் அஜயன் சல்லிசேரி.

இதுபற்றி அவர் கூறும்போது, “குணா குகை 900 அடி ஆழம் கொண்டது. ஆனால் அங்கே படப்பிடிப்பு நடத்த யாருக்குமே இப்போது அனுமதி இல்லை. அது மட்டுமல்ல அங்கே உள்ளே செல்வதற்கு கூட பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் எங்கள் படக்குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று குணா குகையில் 80 அடி தூரம் வரை சென்று பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு அவற்றை வைத்து பெரும்பாவூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் குணா குகை போன்ற செட் போட்டு பிடிப்பை நடத்தினோம். ஆனால் படத்தில் பார்க்கும்போது நிஜமாகவே குணா குகைக்குள் படப்பிடிப்பு நடத்தியது போன்ற உணர்வே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.