“இமாச்சலில் மாநில அரசை கவிழ்க்க மோடி அரசு தீவிரம்… நாங்கள் விடமாட்டோம்!” – காங்கிரஸ்

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ விடமாட்டோம் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதசத்தில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சைகள் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். இதனையடுத்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக பாஜக கூறி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “இமாச்சலப் பிரதேசத்தில் கட்சி மாறி வாக்களித்த விவகாரம் துரதிருஷ்டவசமானது. தற்போதைக்கு இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசை காப்பாற்றுவதே எங்கள் முன்னுரிமை. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. இமாச்சலப் பிரதேச மக்கள் பாஜகவை நிராகரித்தார்கள். மக்களின் இந்த முடிவு மதிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் அரசுகளை கவிழ்ப்பது என்ற ஒற்றை வாக்குறுதியுடன் மோடி அரசு இருக்கிறது. அது நிகழ நாங்கள் விடமாட்டோம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவுறுத்தலின்படி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க இருக்கிறார்கள்.

எங்கள் எம்எல்ஏக்களின் கருத்துகள் குறித்தும் அவர்களுக்கு உள்ள குறைகள், கோரிக்கைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிவார்கள். ஒவ்வொருவரின் கருத்தையும் அறிந்து அது குறித்த அறிக்கையை கட்சித் தலைவருக்கு அவர்கள் கூடிய விரைவில் அளிப்பார்கள். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரலாம். ஆனால், அதற்கு கட்சி தயங்காது. ஏனெனில், அனைத்தையும்விட கட்சி மேலானது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, இமாச்சலில் சட்டப்பேரவை இன்று கூடியதும் பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து அக்கட்சி ஆளுநரிடம் நேரில் முறையிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், “காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை கிடையாது. எனவே, இந்த அரசுக்கு ஆட்சியில் நீடிக்கும் தகுதி இல்லை.

பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை காங்கிரசுக்கு இல்லை. இதை கருத்தில் கொண்டே சபாநாயகர், பாஜக எம்எல்ஏக்கள் 15 பேரை அவர்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததும் காரணமே இல்லாமல் இடைநீக்கம் செய்துள்ளார். அவைக் காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 சுயேட்சைகள் ஆகியோர் எங்களோடு இருக்கிறார்கள் மேலும் பலரும் எங்களோடு இருக்கிறார்கள். தற்போதைய காங்கிரஸ் அரசு அதிகாரத்தில் இருப்பதற்கான உரிமை இல்லை. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சட்டப்பேரவையில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. கட்சி மேலிடத்தின் உத்தரவாக அது இருக்கலாம். ஆனால், உறுதியாக தெரியவில்லை. சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொஞ்சமேனும் தார்மீக சிந்தனை இருப்பின் அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, “தற்போது நடப்பதைப் பார்த்து அஞ்சுபவன் அல்ல நான். பட்ஜெட் தாக்கலின்போது காங்கிரஸ் வெற்றி பெறும். பட்ஜெட் இன்று நிறைவேறும். நான் ராஜினாமா செய்துவிட்டதாக பாஜக வதந்தி பரப்பி வருகிறது. கட்சி மேலிடமோ யாருமோ என்னை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை; நானும் ராஜினாமா செய்யவில்லை.

காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே பிளவை ஏற்படுத்த அவர்கள் முயல்கிறார்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்க்க முயல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.