வயநாட்டில் ஆனி ராஜா… வேட்பாளர்களை அறிவித்த சி.பி.எம் கூட்டணி கட்சிகள் | கேரளாவில் இந்தியா கூட்டணி?

சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலுவாக உள்ளன மாநிலம் கேரளம். எனவேதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த சி.பி.எம் கேரளாவில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டது. கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்தமுறை 19 சீட்டுகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றது, ஓரிடத்தில் மட்டுமே சி.பி.எம் வென்றது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டதால் கேரளா முழுவதும் காங்கிரஸுக்கு எழுச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்தமுறை வயநாட்டில் ராகுல் களம் இறங்குவாரா அல்லது தொகுதியை ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு மாற்றுவாரா என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மத்தியில் பா.ஜ.க ஆட்சியை அகற்றுவதற்காக இந்தியா கூட்டணியை காங்கிரஸ் கட்டமைத்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் சி.பி.எம், சி.பி.ஐ உளிட்ட இடதுசாரி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால், கேரளா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள் தனி கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சி எதிர் அணியில் போட்டியிட தயாராகி வருகின்றன.

கேரளா சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன்

மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 15 தொகுதிகளில் சி.பி.எம் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் சி.பி.ஐ, ஒரு தொகுதியில் கேரளா காங்கிரஸ் (எம்)-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியின் சிட்டிங் எம்.பி-யான தாமஸ் சாளிக்காடன் கோட்டயம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். சி.பி.ஐ கட்சி 4 வேட்பாளர்கள் நேற்றே அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதில் ராகுல் காந்தி எம்.பி-யாக இருக்கும் வயநாடு தொகுதியில் ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ஐ தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜா-வின் மனைவியாவார். திருவனந்தபுரம் தொகுதியில் பந்நியன் ரவீந்திரன், மாவேலிக்கரை தொகுதியில் அருண்குமார், திருச்சூர் தொகுதியில் சுனில்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள சி.பி.எம் தலைமை அலுவலகமாக ஏ.கே.ஜி சென்டரில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் 15 வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

சி.பி.எம் வேட்பாளர்கள் பட்டியல்

ஆற்றிங்கல் தொகுதியில் திருவனந்தபுரம் மாவட்ட செயலாளரான வி.ஜாய் எம்.எல்.ஏ, பத்தனம்திட்டா தொகுதியில் முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான டி.எம். தாமஸ் ஐசக், கொல்லம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், நடிகருமான எம்.முகேஷ், ஆலப்புழாவில் ஏ.எம் ஆரிப், எர்ணாகுளம் தொகுதியில் கே.ஜெ.ஷைன், இடுக்கியில் ஜாய்ஸ் ஜார்ஜ், சாலக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.ரவீந்திரநாத், ஆலத்தூர் தொகுதியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், பாலக்காட்டில் பொலிட்பீரோ உறுப்பினர் ஏ.விஜயராகவன், பொன்னானி தொகுதியில் கே.எஸ்.ஹம்சா, மலப்புறம் தொகுதியில் வி வாசிப், கோழிக்கோடு தொகுதியில் எளமரம் கரீம், வடகரை தொகுதியில் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான கே.கே.சைலஜா டீச்சர், கண்ணூரில் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன், காசர்கோட்டில் கட்சி மாவட்டச் செயலாளரான எம்.வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க-வை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் இடது முன்னணியின் தேர்தல் முத்திரை வாக்கியம் என எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளர்.

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

சி.பி.எம் கூட்டணி 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி இன்று தான் வேட்பாளர்கள் பற்றி பரிசீலிக்க உள்ளதாக எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்திருக்கிறார். ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் போடியிடுவாரா, இல்லையா என்பது தெரியாத நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் சிட்டிங் எம்.பி சசி தரூர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வயநாட்டில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சி.பி.எம் கூட்டணியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சுணக்க நிலையிலேயே காங்கிரஸ் இருக்கிறது. மேலும் கேரளாவில் காங்கிரஸை விமர்சித்து அரசியல் செய்யும் நிலையில் இடதுசாரிகள் உள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுகிறது?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.