சிவகாசி: போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி; வங்கி ஊழியர் உட்பட 2 பேரிடம் விசாரணை!

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து வங்கிப் பணம் ரூ.7.55 கோடி மோசடி செய்த வங்கி ஊழியர் உட்பட இரண்டு பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசிய அதிகாரிகள், “விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மண்டல மேலாளர் ரஞ்சித் (வயது 45). திருநெல்வேலியை மண்டல கண்காணிப்பு அலுவலகமாக கொண்டு இயங்கும் இந்த வங்கி கிளைகளில் ரஞ்சித்தின் கண்காணிப்பின் கீழ் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் 46 கிளை வங்கிகள் இயங்கி வருகிறது. இவர், சிவகாசி வங்கி கிளையில் தணிக்கையில் ஈடுபட்டபோது, 56 பேரின் 126 நகைக்கடன் கணக்குகளில் உள்ள 15, 427 கிராம் தங்க நகைகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளது.

காவல் நிலையம்

போலியான தங்க நகைகளை அடகு வைத்து வங்கிப் பணம் ரூ.7 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 509 மோசடி செய்யப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணான வகையில் பதில் அளித்துளள்னர். எனவே இது தொடர்பாக ரஞ்சித், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் முத்துமணி என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம், சிவலார்பட்டியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலசுந்தரம், சிவகாசி வங்கிக் கிளையில் நகைக்கடன் வாடிக்கையாளராக உள்ளார். அதேசமயம், சிவகாசியில் நகைக்கடை நடத்தி தொழில் செய்தும் வருகிறார்.

இந்த நிலையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கத்தில், போலி நகைகளை அடகு வைத்து வங்கிப் பணத்தை மோசடி செய்ய திட்டம் தீட்டி செயல்படுத்தி உள்ளனர். அதன்படி, வங்கிப் பணம் ரூ.7.55 கோடிமோசடி செய்துள்ளது கணடுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோரை சிவகாசி நகர் போலீஸார் பிடித்து செய்து விசாரித்து வருகின்றனர்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.