பெங்களூரு ‘ராமேஸ்வரம் கஃபே’யில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான்: கர்நாடக முதல்வர் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தி உள்ளார்.

பெங்களூரு குண்டனஹல்லி பகுதியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபேவில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் துறையினர் விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்துள்ளனர்.

சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொடக்கத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது. உணவகத்தில் திடீரென ஏற்படும் வெடிப்பு அடங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பெங்களூரு தெற்கு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரிடம் நான் தொலைபேசியில் பேசினேன். வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற கைப்பையில் இருந்துதான் ஏதோ வெடித்துள்ளது. சிலிண்டர் ஏதும் வெடிக்கவில்லை என்றார். இது ஏதோ குண்டுவெடிப்பு போலவே உள்ளது. பெங்களூரு மக்களுக்கு முதல்வர் சித்தராமையா தெளிவான பதிலைத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான். குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்திருக்கிறது. வாடிக்கையாளர் ஒருவரின் பையில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது.

இதை யார் வெடிக்கச் செய்தார்கள் என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நிலைமை குறித்து ஆய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சரை நான் கேட்டுக்கொண்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.