மக்களவைத் தேர்தல்: தென்காசியை குறிவைக்கும் வேட்பாளர்கள் யார் யார்? – அரசியல் கட்சிகள் அப்டேட்!

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ள இந்த சமயத்தில், பிரதான கட்சிகளின் சார்பில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு விநியோகமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு தி.மு.க., அ.தி.மு.க., தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க-விலும் கடும் போட்டி நிலவுகிறது.

திமுக

திமுக & கூட்டணி..!

இதுபற்றி தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் பேசினோம். “தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க-வே மீண்டும் போட்டியிட வேண்டும். அதையே தான் மக்களும் விரும்புகிறார்கள். ஆளும்கட்சி சார்பில், தென்காசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பலரும் விருப்பமனு பெற்றிருக்கிறார்கள். அதன்படி, சங்கரன்கோவிலை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி தொகுதியின் தற்போதைய உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர் துரை ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்களாவர்.

லிங்கம்

இவர்களிடம் நடத்தப்படும் நேர்காணலின் அடிப்படையில் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேசமயம் கூட்டணிக்கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளர்கள் களம் இறங்குவதற்கு தயாராகி வருகின்றனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பொ‌.லிங்கம், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் உறவினர் சங்கை கணேசன், மருத்துவர் சங்கரக்குமார் ஆகியோர் முயற்சி செய்வதாக தகவல் உள்ளது” என்றனர்.

அதிமுக:

அ.தி.மு.க. சார்பில் பேசியவர்கள், “மாவட்ட முக்கியக் கோரிக்கைகளான ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி மையம், மருத்துவக்கல்லூரி, செண்பகவல்லி அணை சீரமைப்பு, ஜம்பு நதி கால்வாய் திட்டம், வேளாண் பொருள் பதப்படுத்தி சேமிப்பதற்கான மற்றும் கொள்முதல் நிலையம் ஆகியவை நிறைவேற்றப்படவில்லை. மாவட்டத்தில் கண்கூடாக நடைபெறும் கனிமவள கடத்தல்களையும் அவர்களால் தடுக்கமுடியவில்லை. ஆகவே, தென்காசி மாவட்டம் கடந்த ஐந்தாண்டுகளில் எந்த நன்மையும் அடையவில்லை.

அதிமுக

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் மாற்றத்தை அ.தி.மு.க. கொண்டுவரும். அ.தி.மு.க.சார்பில், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, முன்னாள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா உள்பட மேலும் ஒருசிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை எதிர்பார்க்கிறார்கள். விரைவில் வேட்பாளர் யார் என்பதை தலைமை இறுதி செய்யும்” என்றனர்.

பாஜக ரேஸில் யார் யார்?

பா.ஜ.க.-வினர் பேசுகையில், “தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதற்கு நெல்லையில் பா.ஜ.க. சார்பில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டமே சாட்சி. வீடுகட்டும் திட்டம், 100 நாள் வேலைத் திட்டம், பயிர் காப்பீடு, இன்ஷூரன்ஸ், மருத்துவ காப்பீடு என மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மோடி அரசு தரம் உயர்த்தி உள்ளது. மோடி அரசின் சாதனைகள் பிரதமர் நரேந்திர மோடியை, மத்தியில் மூன்றாம் முறையாக மீண்டும் ஆட்சியில் அமரச்செய்வது உறுதி. ஆகவே, தென்மாவட்ட மக்களுக்கு தேவையான வளர்ச்சியை பா.ஜ.க.வால் தான் கொண்டுவரமுடியும். பா.ஜ.க. சார்பில் தென்காசி தொகுதியில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவின் மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, மாநில செயலாளர் பொன்.பாலகணபதி, தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மகாராஜன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சிவநாதன், கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் ரேவதி பாலீஸ்வரன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

பாஜக

இதில் மாநில செயலாளர் பொன்.பாலகணபதிக்கு சீட் தருவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். தொழிலதிபர் ஆனந்தன் நீலகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம். நீலகிரி தொகுதியை குறிவைத்து வந்த, தற்போது மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன், ராஜ்ய சபா எம்.பி‌.யாக நியமனம் செய்யப்பட்டதால் அந்த இடம் காலியாக் இருக்கிறது” எனக்கூறினர். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தென்காசி பாராளுமன்ற வேட்பாளராக கடந்தமுறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த இசை மதிவாணனே மீண்டும் இந்தமுறை வேட்பாளராக களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.