குஜராத்தின் 'ஒற்றுமை சிலை' ஒரு பொறியியல் அதிசயம் – நேரில் பார்வையிட்ட பில் கேட்ஸ் பாராட்டு

காந்திநகர்: குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை, ஒரு பொறியியல் அதிசயம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பில் கேட்ஸ், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையைப் பார்வையிட்டார்.

இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈர்க்கக்கூடிய ஒற்றுமை சிலையைப் பார்வையிட அழைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இது ஒரு பொறியியல் அதிசயம். அதோடு, சர்தார் பட்டேலுக்கு ஒரு பெரிய அஞ்சலி. இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில், ஒற்றுமை சிலை முன்பாக டுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வியாழக்கிழமை சந்தித்த பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பேசினார். இதையடுத்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நரேந்திர மோடியை சந்திப்பது எப்போதும் ஊக்கமளிக்கக்கூடியது. அவருடன் விவாதிக்க நிறைய இருக்கிறது. இந்த சந்திப்பின்போது, பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசினோம். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; விவசாயம், சுகாதாரம் மற்றும் காலநிலை தழுவலில் புதுமை, இந்தியாவிலிருந்து உலகம் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடம் ஆகியவை குறித்தும் பேசினோம்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார்.

குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் பில் கேட்ஸ் கலந்து கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.