“விசிகவுக்கு 2 சீட்களுக்கு மேலாக தர மறுத்தால் திரும்பத் திரும்ப கேட்போம்” – திருமாவளவன்

சென்னை: “நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் பயணிப்போம். இந்தத் தேர்தலை திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் இணைந்து தான் எதிர்கொள்வோம். எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்கிற உரிமை, தேவை உள்ளது. இரண்டு தொகுதிகளுக்கு மேலாக கொடுக்க மறுத்தால் நாங்கள் திரும்பத் திரும்ப கேட்போம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக உடன் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. மாறாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. மக்களவைத் தேர்தல், திமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம் முடிய தாமதமானதால் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியவில்லை. எனினும், ஓரிரு நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கூட்டணி தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் தேவை இருந்தால் சந்திப்போம். கட்சிக் கூட்டத்தில் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என விசிக நிர்வாகிகள் வலியுறுத்தியது உண்மைதான்.

தொகுதிப் பங்கீட்டில் திமுக அவசரம் காண்பிக்கவில்லை. கொள்கைப் புரிதலோடு இருக்கிற கட்சிகள் தான் திமுக கூட்டணியில் உள்ளனர். எனவே, கூட்டணிக்குள் எந்த குழப்பமோ, அவசரமோ, பதற்றமோ கிடையாது. இன்றைய பேச்சுவார்த்தையில் வாய்ப்பிருந்தால் பங்கேற்கலாம் என்று திமுக சொல்லியது. ஆனால், எங்கள் கட்சி கூட்டம் தாமதமாக தொடங்கியதால்தான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. அதை திமுகவிடம் சொல்லிவிட்டோம். வெளியில் மற்றவர்கள் வேறு மாதிரி நினைப்பார்கள் என்பதற்காக நாங்கள் அவசரப்பட முடியாது. அவசரப்பட வேண்டிய எந்த தேவையும் எங்களுக்கு இல்லை.

நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் பயணிப்போம். இந்தத் தேர்தலை திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் இணைந்துதான் எதிர்கொள்வோம். அதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை. எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்கிற உரிமை, தேவை உள்ளது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஊகம் செய்துகொள்ளலாம். ஆனால், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக இந்த தேர்தலை சந்திக்கும். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இரண்டு தொகுதிகளுக்கு மேலாக கொடுக்க மறுத்தால் நாங்கள் திரும்பத் திரும்ப கேட்போம்.

காங்கிரஸ் தலைமையில்தான் அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணி இயங்குகிறது. அதில் முன்னின்று ஒருங்கிணைத்ததில் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே, திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் ஏதேனும் ஓர் இடைவெளி உருவாகும் அதற்குள் நுழையலாம் என யாரும் கனவு காண வேண்டியதில்லை. தொகுதிப் பங்கீட்டுக்கு கால தாமதம் ஆகலாம். ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்த இடைவெளியும் ஏற்படாது. யாரும் இலவு காத்த கிளியாக காத்திருக்க தேவையில்லை.

தனிச் சின்னம் எங்களுக்கு பிரச்சினையில்லை. திமுக கூட்டணி பெரிய கூட்டணி. 10 கட்சிகள் உள்ளன. எனவே, பேச்சுவார்த்தை தாமதமாகும். அந்த இடத்தில் நாங்கள் இருந்தாலும் அப்படித்தான் நடந்துகொண்டிருப்போம். எங்களின் உழைப்பு, பங்களிப்பு, வலிமை என்னவென்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அந்தடிப்படையில் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற நியாயத்தையும் அவர் உணர்வார். அவர்களுடைய கஷ்டங்கள் என்னவென்பது எங்களுக்கும் தெரியும். இந்த பரஸ்பர புரிதலில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் அமையும்.

இந்த முறை பாஜக, அதிமுக கூட்டணிகள் அமைதியாக இருப்பதால் திமுக கூட்டணி பற்றிய பேச்சு அதிகமாகியுள்ளது. சிதம்பரம் தொகுதி நான் வழக்கமாக நிற்பது. அங்கு ஐந்து முறை போட்டியிட்டுள்ளேன். அதைத்தான் மீண்டும் கேட்டுப்பெறுவேன்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.