71-வது பிறந்தநாள் கொண்டாடினார் முதல்வர் ஸ்டாலின்: கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டிகொண்டாடினார். பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தியதுடன், அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர் களிடம் வாழ்த்து பெற்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 71-வது பிறந்தநாள். இதையொட்டி, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் காலை 7 மணி அளவில் குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள், வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

கோபாலபுரம் இல்லத்தில்… பின்னர், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி, தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பிறகு, சிஐடி நகர் இல்லத்துக்கு சென்று கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார். அவருக்கு ராசாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், வீடு திரும்பிய முதல்வர், காலை உணவை முடித்துவிட்டு, 9.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார்.

அறிவாலயத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு, ‘திராவிட மாடல் நாயகர் வாழ்க பல்லாண்டு’ என்ற வாசகங்களுடன் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டினார்.

அமைச்சர்கள், நிர்வாகிகள்: தொடர்ந்து, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக வந்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்டம் சார்பில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் அமைச்சர் ஆர்.காந்தி, சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ,காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தெற்குஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர்சரஸ்வதி மனோகரன் ஆகியோரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித் தனர்.

கூட்டணி தலைவர்கள்: கூட்டணி கட்சி தலைவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, திருநாவுக்கரசர், சட்டப்பேரவை கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், அசன் மவுலானா உள்ளிட்டஎம்எல்ஏக்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, அவைத்தலைவர் அர்ஜுன ராஜ், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சிகளின் நிர்வாகிகளும் முதல்வருக்கு வாழ்த்து கூறினர்.

சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைகட்சித்தலைவர் வைத்தியநாதன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் எம்எல்ஏ அபுபக்கர், தவாக தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்து வாழ்த்தினர். மமக தலைவர் ஜவாஹிருல்லாவை முதல்வர் கட்டியணைத்து நன்றி தெரிவித்தார்.

அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் என்.கண்ணய்யா, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், நடிகர்கள் தியாகராஜன், பிரசாந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தொண்டர்கள் சிலர் வித்தியாசமான வேடங்களில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்தி ருந்து புத்தகங்கள், பழக்கூடை உள்ளிட்டவற்றை பிறந்தநாள் பரிசாக முதல்வருக்கு வழங்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.