‘பாஜக ஆட்சியை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உள்ளது’ – திருச்சி சிவா எம்.பி பேச்சு @ மதுரை

மேலூர்: மதுரை – மேலூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் குமரன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை குழுத்தலைவருமான திருச்சி சிவா எம்.பி சிறப்புரையாற்றி இருந்தார். அவர் பேசியதாவது.. “மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை மாற்றிட வேண்டிய அவசியம் நிர்பந்தம் நிரம்ப இருக்கிறது. 1952-ல் இந்திய நாட்டின் முதல் பொதுத்தேர்தலுக்கும் 2024 தேர்தலுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. இதுவரை யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் வர வேண்டாம் என்பதற்கான தேர்தலாக இருந்தது. ஆனால், இந்த தேர்தல் எதிர்காலத்தில் இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா, யதேச்சதிகாரக நாடாக இருக்க வேண்டுமா என்பதற்கான தேர்தலாக உள்ளது.

ஜனநாயக நாடாக இருக்கப்போகிறதா, இல்லை ஒற்றைத் தலைமை நோக்கி அதிபர் ஆட்சி வரப்போகிறதா என்பதற்கான தேர்தலாக நடைபெறவுள்ளது. இந்தியா ஜனநாயக நாடாக இருந்தால் அரசாங்கத்தை விமர்சித்து பேச முடியும், எழுத முடியும். மக்கள் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே மதம், ஒரே மொழி என்று சொன்னால் ஜனநாயகம் இருக்காது, சர்வாதிகாரம்தான் நிலைக்கும். பாஜக அரசு பயங்கரவாத சட்டங்கள் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறது.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். எங்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என அதிமுக இரட்டை வேடம் போடுகின்றது. சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்தபோது அதனை அதிமுக எம்.பிக்கள் 13 பேரும் ஆதரித்தனர். அதன் மூலம் அதிமுக, இஸ்லாமியர்களை வஞ்சித்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் குடியுரிமையை தடுத்தவர்கள். மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஒரு பிரிவினருக்கு எதிராக போராடுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரைக் கொண்டு அதிகாரங்களை பறிக்கின்றனர்.

டெல்லியில் உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை கொடு என விவசாயிகள் போராடுகின்றனர். அதற்கு செவி மடுக்காமல் ஆயுதங்கள் மூலம் போராட்டத்தை முடக்குகிறது பாஜக அரசு. கடந்தாண்டில் மட்டும் 11,500 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். எனவேதான் எச்சரிக்கையோடு பேசுகிறேன். இம்முறை தவறினால் எம்முறையும் கிடைக்காது. இந்த தேர்தலில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நாடு வாழ நாம் அனைவரும் சேர்ந்து வாழ நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். நாட்டை பாதுகாக்க சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார். முடிவில் மாவட்ட பிரதிநிதி இளஞ்செழியன் நன்றி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.