`சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் 2026-க்கு முன்னரே திமுக ஆட்சி கலைக்கப்படும்!' – செல்லூர் ராஜூ பேச்சு

“ஜாபர் சாதிக், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்புதான் 4 நிறுவனங்களை தொடங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்…” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

ஆர்பாட்டம்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு காரணம் தி.மு.க அரசுதான் எனக் குற்றம்சாட்டி, மதுரை பெத்தானியாபுரத்தில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார்,  ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செல்லூர் ராஜூ பேசும்போது, “தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், போதைப்பொருள் கடத்தலில் உலகத்திற்கே வழிகாட்டியாக தி.மு.க திகழ்கிறது.

ஆங்கிலப் படங்களில் காட்டுவதைப்போல் போதைப்பொருள் கடத்தலில் கிங் ஆஃப் கிங்காக ஜாபர் சாதிக் விளங்கி இருக்கிறார்.

செல்லூர் ராஜூ

ஜாபர் சாதிக், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்புதான் 4 நிறுவனங்களை தொடங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார், ஜாபர் சாதிக் தி.மு.க-வுடன் மிக நெருக்கமாக இருந்ததால் காவல்துறையினர் அவரை நெருங்க முடியவில்லை.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் யாரும் பிடிக்க முடியாத சந்தன கடத்தல் வீரப்பனைச் சுட்டுப் பிடித்தது தமிழ்நாடு காவல்துறை. ஆனால், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக்குடன் தமிழக டி.ஜி.பி தொடர்பில் இருக்கிறார், தி.மு.க-விடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை அடமானம் வைத்து விட்டது.

ஆர்ப்பாட்டம்

தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்காக மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்தது, தி.மு.க கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லை. தி.மு.க ஆட்சி என்றைக்கு வீட்டுக்கு செல்கிறதோ அன்றைக்குத்தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம்.

5 ஆண்டுகளில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களுக்காக ஏதும் செய்யவில்லை, 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் குளுகுளு ஏசியில் அமர்ந்து விட்டு, படிக்காசை வாங்கி கொண்டு வருகிறார்கள், தமிழகத்தில் உள்ள சமூக விரோதிகள் அனைவரும் தி.மு.க-வில் அங்கம் வகிக்கிறார்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் 2026 க்கு முன்னரே தி.மு.க ஆட்சி கலைக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.