I cant contest BJP candidate suddenly withdraws | என்னால் போட்டியிட முடியாது பா.ஜ., வேட்பாளர் திடீர் விலகல்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தின் அசன்சால் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி பாடகரும், நடிகருமான பவன் சிங், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என பின்வாங்கியுள்ளார்.

வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சி தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது.

மேற்கு வங்கத்தின் அசன்சால் தொகுதி வேட்பாளராக, போஜ்புரி பாடகரும், நடிகருமான பவன் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது.

இந்த தொகுதியில், திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த நடிகர் சத்ருஹன் சின்ஹா எம்.பி.,யாக உள்ளார்.

இந்நிலையில், பாடகர் பவன் சிங் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘அசன்சால் தொகுதி வேட்பாளராக என் பெயரை அறிவித்த பா.ஜ., தலைமைக்கு நன்றி. ஆனால், சில காரணங்களால் தேர்தலில் என்னால் போட்டியிட இயலாது’ என குறிப்பிட்டு உள்ளார்.

திடீர் விலகலுக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.

இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், ‘பவன் சிங்கின் பாடல்கள் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிப்பவை. பெண்கள் மேம்பாடு குறித்து பேசும் பா.ஜ., அவருக்கு சீட் அளித்துள்ளது’ என, திரிணமுல் காங்., தலைவர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில், பவன் சிங் பின்வாங்கியுள்ளதை திரிணமுல் காங்., கேலி செய்துள்ளது.

‘தேர்தலுக்கு முன்னதாகவே, அசன்சால் தொகுதியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டனர்’ என, அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

அரசியலுக்கு முன்னாள் அமைச்சர் முழுக்கு

முன்னாள் மத்திய சுகாதார அமைச்சரான ஹர்ஷவர்த்தன், டில்லி சாந்தினி சவுக் தொகுதியிலிருந்து கடந்த முறை பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை, அந்த தொகுதி அவருக்கு ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ஹர்ஷவர்த்தன் சிங் நேற்று அறிவித்தார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த 30 ஆண்டுகளாக எம்.எல்.ஏ., – எம்.பி., மத்திய, மாநில அமைச்சர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளேன். எல்லா தேர்தல்களிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். மிகச் சிறந்த தலைவரான நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றியது, எனக்கு கிடைத்த கவுரவம். எனக்கு சில கனவுகள் உள்ளன. டில்லியில் உள்ள என் மருத்துவ கிளினிக் எனக்காக காத்திருக்கிறது. அங்கு மருத்துவ சேவையாற்ற திட்டமிட்டுள்ளேன். இதனால், தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.