காயத்தில் இருந்து விடுதலை ஆன முக்கிய வீரர்… மும்பை இந்தியன்ஸ் அணி ஹேப்பி!

Suryakumar Yadav, IPL 2024: ஐபிஎல் தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ளது. மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் சென்னையில் தொடங்க உள்ள நிலையில், 10 அணிகளும் வெவ்வேறு இடங்களில் தங்களது பயிற்சி முகாமை தொடங்கி உள்ளனர். குறிப்பாக, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் தனது பயிற்சியை தொடங்கியிருக்கின்றன. ருதுராஜ் கெய்க்வாட் போன்ற முக்கிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கேப்டன் தோனியும் இன்று தனிவிமானம் மூலம் சென்னை விமானம் நிலையம் வந்து, சிஎஸ்கே அணி உடன் இணைந்தார். அவரின் வருகையை ரசிகர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இன்னும், இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ரஞ்சி கோப்பை தொடர் ஆகியவை நிறைவடைந்த பின்னர் அனைத்து வீரர்களும் அவரவர் அணிகளுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவர்கள் விளையாடுவது சந்தேகம்…

இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னரே பல வீரர்கள் காயத்தால் விலகி உள்ளனர். கஸ் அட்கின்சன், மார்க் வுட், முகமது ஷமி, டேவான் கான்வே உள்ளிட்டோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அதுமட்டுமின்றி, சிவம் தூபே, முஸ்தபிஷூர் ரஹ்மான், ரஷித் கான், கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ரீஸ் டாப்ளி உள்ளிட்டோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இவர்களில் யார் யார் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றே இதுவரை உறுதியாகவில்லை.

வலைப்பயிற்சியில் சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமாரும், கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அதில் இருந்து மீண்டு வந்தார். கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை அவர் எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்த நிலையில், இன்று அவர் வலைப் பயிற்சியில் பங்கேற்றார்.

ஜெர்மனியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின், பெங்களூரு என்சிஏவில் மறுவாழ்வு பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடரை முன்னிட்டு அவர் வலைப் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து, ஐபிஎல் தொடருக்கு பின் டி20 உலகக் கோப்பையும் நடைபெற இருப்பதால், அவரின் உடல்திறன் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு அதன்படியே ஐபிஎல் தொடரில் அவர் விளையாட அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது.

மும்பை அணியில் ஏற்கெனவே, கேப்டன்ஸி மாற்றம் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மீண்டும் கொண்டுவந்த மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு கேப்டன் பொறுப்பையும் கொடுத்தது. ரோஹித் சர்மா அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்பட்ட நிலையில், அந்த அணியின் டிரஸ்ஸிங் ரூம்மில் ஆரோக்கியமான சூழல் இருக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. 

  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.