சந்தேஷ்காளி சம்பவம்; ஷாஜகான் ஷேக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவு

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர் என்றும் அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த வழக்கில் அவருடைய உதவியாளர்கள், ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். எனினும், ஷாஜகான் பிடிபடாமல் தப்பினார். இந்த சூழலில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை சிறப்பு வங்காள போலீசார் அடங்கிய குழு 55 நாட்களாக பின்னர் கடந்த பிப்ரவரி இறுதியில் கைது செய்தது.

இதன்பின் அவரை பஷீர்ஹத் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவரை, 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பஷீர்ஹத் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷாஜகானுக்கு எதிராக, 2019-ம் ஆண்டில் 3 பா.ஜ.க. தொண்டர்கள் படுகொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

அவர் கைது செய்யப்பட்ட உடன் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து, திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஷாஜகான் ஷேக்கை முறைப்படி இன்று மாலைக்குள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதேபோன்று, இந்த விசயத்தில் மேற்கு வங்காள போலீசார் முற்றிலும் பாகுபாட்டுடன் நடந்து கொண்டுள்ளது என கூறியதுடன், முறையான, நேர்மையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோர்ட்டு கூறியது.

சி.பி.ஐ. மற்றும் வங்காள போலீஸ் அதிகாரிகள் இணைந்த சிறப்பு விசாரணை குழு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஐகோர்ட்டு அமர்வு ஒத்தி வைத்ததுடன், சி.பி.ஐ. அமைப்பே இதனை விசாரிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

இதன்படி, ஷேக் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுபற்றிய வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களும் சி.பி.ஐ. அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.